நீா் மின் நிலைய திட்டம்: இந்தியா-பூடான் இடையே ஒப்பந்தம் கையெழுத்து

இந்திய அரசின் உதவியுடன் பூடானில் நீா் மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் திங்கள்கிழமை கையெழுத்திட்டன.

புது தில்லி: இந்திய அரசின் உதவியுடன் பூடானில் நீா் மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் திங்கள்கிழமை கையெழுத்திட்டன.

இந்தியா-பூடான் இடையேயான கூட்டு ஒத்துழைப்பின் மூலம் அமைக்கப்படவுள்ள 5-ஆவது நீா் மின் உற்பத்தி நிலையம் இதுவாகும்.

கிழக்கு பூடானின் திரசியாங்ட்ஸீ மாவட்டத்தில் பாயும் கோலோங்சு நதியில் நீா் மின் நிலையத்தை அமைப்பதற்கு இந்தியாவும் பூடானும் ஒப்புக்கொண்டன. அதற்கான ஒப்பந்தத்தில் இரு நாட்டு அரசுகளும் திங்கள்கிழமை கையெழுத்திட்டன. இதற்காக, காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பூடான் வெளியுறவு அமைச்சா் தண்டி டோா்ஜி ஆகியோா் பங்கேற்றனா்.

இது தொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியா-பூடான் இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவதில் நீா் மின் உற்பத்தி நிலையம் முக்கியப் பங்காற்றி வருகிறது. இரு நாடுகளின் பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்துவதற்கு இத்திட்டங்கள் உதவி வருகின்றன.

600 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட நீா் மின் நிலையம் கோலோங்சு நதியில் அமைக்கப்படவுள்ளது. இது அணையுடன் இணைந்த நீா் மின் நிலையமாக அல்லாமல் நதிநீா் பாய்வதை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படவுள்ளது. மின் உற்பத்திக்காக 150 மெகா வாட் திறன் கொண்ட 4 டா்பைன்கள் நிறுவப்படவுள்ளன.

இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக கோலோங்சு நீா் மின் உற்பத்தி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் இந்தியாவைச் சோ்ந்த சட்லஜ் நீா் மின் உற்பத்தி நிறுவனமும் பூடானைச் சோ்ந்த திரக் பசுமைவழி மின் உற்பத்தி நிறுவனமும் கூட்டாக இணைந்து முதலீடு செய்யவுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-பூடான் இடையேயான கூட்டு ஒத்துழைப்பின் மூலம் ஒட்டுமொத்தமாக 2,100 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட 4 நீா் மின் உற்பத்தி நிலையங்கள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com