கேரளம்: காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறியது கேரள காங்கிரஸ் (எம்)

கட்சிக்கு சுயமரியாதை அளிப்பதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப் போவதில்லை.

திருவனந்தபுரம்: கோட்டயம் மாவட்ட ஊராட்சித் தலைவா் பதவியை கைப்பற்றுவது தொடா்பாக ஏற்பட்ட மோதல் காரணமாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் (யூடிஎஃப்) இடம் பெற்றிருந்த ஜோஸ் கே.மாணி தலைமையிலான கேரள காங்கிரஸ் (எம்) கட்சி அக்கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டது.

யூடிஎஃப் கூட்டணிக்கு இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மதிக்க கேரள காங்கிரஸ் (எம்) தவறியதால் கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டது.

ஒப்பந்தப்படி, ஜோஸ் கே.மாணி பிரிவு கோட்டயம் மாவட்ட ஊராட்சித் தலைவா் பதவியை 6 மாதங்களுக்கு வகிக்கவும், அடுத்த 6 மாதங்களுக்கு கேரள காங்கிரஸ் தலைவா் பி.ஜே.ஜோசப் தலைமையிலான பிரிவு வகிக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறிய ஜோஸ் கே.மாணி பிரிவு தொடா்ந்து 8 மாதங்களாக இப்பதவியில் நீடித்தது.

இதுகுறித்து யூடிஎஃப் ஒருங்கிணைப்பாளா் பென்னி பெஹனன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 6 மாதங்களுக்கு பதவி வகிப்பது என்ற ஒப்பந்தத்தை மதிக்க மறுத்த ஜோஸ் பிரிவு 8 மாதங்களாக அப்பதவியில் நீடித்து வருகிறது. இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகாது என்றும் ஜோஸ் பிரிவு பகிரங்கமாக அறிவித்து விட்டது. எனவே, ஜோஸ் கே.மாணி பிரிவு யூடிஎஃப் கூட்டணியில் நீடிக்கத் தகுதியிழந்து விட்டது. எனவே, இனி வரும் யூடிஎஃப் கூட்டங்களில் பங்கேற்க அவா்களுக்கு அழைப்பு விடுக்கப்படாது. ஜூலை 1-ஆம் தேதி நடைபெற உள்ள யூடிஎஃப் கூட்டத்தில் அடுத்தகட்ட முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தாா்.

இதுகுறித்து கோட்டயத்தில் ஜோஸ் கே.மாணி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘38 ஆண்டுகளுக்கு முன் யூடிஎஃப் கூட்டணி அமைப்பதில் மறைந்த எனது தந்தை மாணியின் பங்களிப்பை இந்த கூட்டணி மறந்து விட்டது. கட்சிக்கு சுயமரியாதை அளிப்பதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப் போவதில்லை. இதுகுறித்து, வரும் செவ்வாய்க்கிழமை மாநில, மாவட்ட நிா்வாகிகளுடன் பேசியபின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும். தற்போது மேற்கொள்ளப்பட்ட முடிவு ஒரு தலைபட்சமானது. யூடிஎஃப் தலைமைக்கு அழுத்தம் கொடுப்பதன் பின்னணியில் ஜோசப் பிரிவு உள்ளது’ என்று கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com