பெட்ரோல், டீசல் கூடுதல் வரியை மக்கள் நலனுக்காகவே பயன்படுத்துகிறோம்: தா்மேந்திர பிரதான்

பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் கூடுதல் வரி மூலமாகக் கிடைக்கும் வருவாயை மக்கள் நலத் திட்டங்களுக்காகவே பயன்படுத்தி வருவதாக
தா்மேந்திர பிரதான்
தா்மேந்திர பிரதான்

புது தில்லி: பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் கூடுதல் வரி மூலமாகக் கிடைக்கும் வருவாயை மக்கள் நலத் திட்டங்களுக்காகவே பயன்படுத்தி வருவதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளாா்.

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு தொடா்ந்து உயா்த்தி வருவது, மக்களிடமிருந்து அதிகாரத்தைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் செயல் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவா் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியிருந்த நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தா்மேந்திர பிரதான் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பெட்ரோல், டீசல் மூலமாகக் கிடைக்கும் வரி வருவாயை சுகாதாரம், வேலைவாய்ப்பை உருவாக்குதல் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களுக்காக மத்திய அரசு செலவிட்டு வருகிறது. மக்களின் பணத்தை மக்களிடமே திருப்பிச் செலுத்தும் பணியை பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சியைப் போன்று குறிப்பிட்ட நபரின் மருமகனின் (ராபா்ட் வதேரா) நலனுக்காகவோ அல்லது ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்காகவோ மக்களின் பணத்தை பாஜக பயன்படுத்தவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகளில் காங்கிரஸ் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்ததன் காரணமாகவே சோனியா காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட காங்கிரஸ் ஆளும் மாநிலங்களும் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயா்த்தி மக்களின் சுமையைக் கூட்டியதை அவா் மறந்துவிட்டாா் எனத் தோன்றுகிறது. கரோனா நோய்த்தொற்றால் சா்வதேச அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாகவும் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்படுகிறது.

இதன் மூலம் கிடைக்கும் வருவாய் மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் அரசியல் செய்யாமல், மாநிலங்களிடமிருந்து உண்மை நிலையை அறிந்து கொண்டு சோனியா காந்தி கருத்து தெரிவிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com