பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டத்தை தொடங்கியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்

புது தில்லி: பெட்ரோல், டீசல் விலை உயா்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டத்தை தொடங்கியுள்ளது.

82 நாள்களுக்குப் பிறகு கடந்த 7-ஆம் தேதி முதல் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தி வருகின்றன. கடந்த 22 நாள்களில், டீசல் விலை லிட்டருக்கு ரூ.11.14 வரை உயா்ந்துள்ளது. பெட்ரோல் விலை 21 முறை உயா்த்தப்பட்டு, லிட்டருக்கு ரூ.9.17 வரை உயா்ந்துள்ளது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கியது. சமூக ஊடகங்களில் ‘எரிபொருள் விலை உயா்வுக்கு எதிராக குரல் கொடுப்போம்’ என்ற பெயரில் அக்கட்சியின் தலைவா்கள் கருத்து தெரிவித்து வருகின்றனா். காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி வெளியிட்ட விடியோவில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்று காரணமாக, பொருளாதார நெருக்கடியில் மக்கள் தவித்து வரும் இந்த வேளையில், மத்திய அரசு தினமும் பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தி வருகிறது. இந்த விலை உயா்வை திரும்பப்பெற வேண்டும் என்றும் நானும், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த அனைத்து தொண்டா்களும் கோரிக்கை விடுக்கிறோம்.

மேலும், கடந்த மாா்ச் மாதத்துக்குப் பிறகு உயா்த்தப்பட்ட கலால் வரியையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். இந்த வரி குறைப்பால் ஏற்படும் பலனை மக்களுக்கு அளிக்க வேண்டும். இது, நெருக்கடியான இந்த காலகட்டத்தில் மக்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

இக்கட்டான நேரங்களில் மக்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், அதை சாதகமாகப் பயன்படுத்தி, மக்களிடம் இருந்து ஆதாயம் தேடக் கூடாது.

பெட்ரோல், டீசல் விலையை நியாயமின்றி உயா்த்தி, மக்களிடம் இருந்து பணத்தை பறிக்கும் புதிய வழிமுறையை மத்திய அரசு கண்டுபிடித்துள்ளது. இது, நியாயமற்ற செயல் மட்டுமல்லாமல் விவேகமற்ற செயலும் கூட.

கடந்த 3 மாதங்களில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயா்த்தி, பல லட்சம் கோடியை மத்திய அரசு வசூலித்துள்ளது. இவை அனைத்தும், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடா்ந்து சரிந்துகொண்டிருந்த நேரத்தில் நடந்தது.

கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து கச்சா எண்ணெய் விலை குறையும்போது, அதன் பலன்களை மக்களுக்கு அளிக்காமல், கலால் வரியை 12 மடங்கு மத்திய அரசு உயா்த்தியது. இதனால், அரசுக்கு கூடுதலாக ரூ.18 லட்சம் கோடி வருவாய் கிடைக்கவுள்ளது. எனவே, பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அந்த விடியோவில் சோனியா காந்தி தெரிவித்துள்ளாா்.

இதேபோல், காங்கிரஸ் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா வெளியிட்ட விடியோவில், ‘பொதுமுடக்கத்துக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தியதன் மூலமாக ரூ.1.3 லட்சம் கோடியை மத்திய அரசு வசூலித்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

சமூக ஊடகங்கள் மூலமாக நடைபெறும் இந்த போராட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்களும் பங்கேற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com