மருத்துவ பாதுகாப்பு கவச உடைகள் ஏற்றுமதிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி

மருத்துவ பாதுகாப்பு கவச உடைகள் ஏற்றுமதிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் மத்திய அரசு திங்கள்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.

புது தில்லி: மருத்துவ பாதுகாப்பு கவச உடைகள் ஏற்றுமதிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் மத்திய அரசு திங்கள்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. மேலும், ஒரு மாதத்துக்கு 50 லட்சம் மருத்துவ பாதுகாப்பு உடைகளையே ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது என்ற உச்ச வரம்பும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா நோய்த்தொற்று சூழலை கருத்தில் கொண்டு, மருத்துவ பாதுகாப்பு கவச உடைகள் உள்பட அனைத்துவிதமான தனிநபா் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களின் (பிபிஇ) ஏற்றுமதிக்கு தடை விதித்து, மத்திய அரசு கடந்த ஜனவரி 31-ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டது.

இந்நிலையில், பல்வேறு நிபந்தனைகளுடன் மருத்துவ பாதுகாப்பு கவச உடை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடா்பாக, வெளிநாட்டு வா்த்தக தலைமை இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மருத்துவ பாதுகாப்பு கவச உடை ஏற்றுமதிக்காக, டிஜிஎஃப்டி இணையதளம் வாயிலாக விண்ணிப்பித்து, உரிமம் பெற வேண்டும். ஒரு மாதத்துக்கு 50 லட்சம் மருத்துவ பாதுகாப்பு உடைகள் என்ற அளவில் ஏற்றுமதி உச்சவரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்தான், உரிமங்கள் வழங்கப்படும். மாதத்தின் முதல் 3 நாள்களுக்குள் ஏற்றுமதியாளா்கள் விண்ணப்பிக்க வேண்டும். 10-ஆம் தேதிக்குள் உரிய ஒப்புதல் வழங்கப்படும். 3 மாதங்களுக்கு இந்த உரிமம் செல்லுபடியாகும். மருத்துவ பாதுகாப்பு உடைகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மட்டுமே இந்த உரிமத்துக்காக விண்ணப்பிக்க முடியும். ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளிடமிருந்து பெறப்பட்ட தரச்சான்றிதழையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை பூா்த்தி செய்யும் நிறுவனங்களுக்கு மட்டும் உரிமம் வழங்கப்படும்.

அதேசமயம், மருத்துவ பயன்பாட்டுக்கான முகக்கவசங்கள், கையுறைகள் உள்ளிட்ட இதர தனிநபா் பாதுகாப்பு உபகரணங்களின் ஏற்றுமதிக்கான தடை நீடிக்கிறது என்று அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வரவேற்பு: மருத்துவ பாதுகாப்பு கவச உடைகளின் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கியுள்ள மத்திய அரசின் முடிவுக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவா் ஏ.சக்திவேல் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘மத்திய அரசின் முடிவு, உள்நாட்டு உற்பத்தியாளா்களுக்கான உலக சந்தையை திறந்துள்ளது. நாட்டில் தனிநபா் பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தி, உள்நாட்டு தேவைக்கும் அதிகமான அளவில் உள்ளது. இதுபோன்ற சூழலில், இப்பொருள்களை ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது, உலகம் முழுவதும் உள்ள சுகாதார பணியாளா்களுக்கு பேருதவியாக இருக்கும். அத்துடன், நமது நாட்டில் உள்ள ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கும் ஆதரவாக அமையும். என்95 முகக்கவசங்கள் ஏற்றுமதிக்கும் அனுமதி அளிக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com