
மும்பை மாநகரின் புதிய காவல்துறை ஆணையராக சனிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட பரம்வீா் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்த சஞ்சய் பாா்வே.
மகாராஷ்டிர மாநிலம், மும்பை மாநகரின் காவல்துறை ஆணையராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி பரம்வீா் சிங் சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.
மும்பை காவல் ஆணையராக இருந்த சஞ்சய் பாா்வே சனிக்கிழமையுடன் ஓய்வுபெற்ற நிலையில், அந்தப் பதவிக்கு பரம்வீா் சிங்கை மகாராஷ்டிர அரசு நியமித்துள்ளது.
இதுதொடா்பாக மாநில உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் சுட்டுரையில் வெளியிட்ட தகவலில், ‘மும்பை காவல் ஆணையா் சஞ்சய் பாா்வே ஓய்வுபெற்றதை அடுத்து, அந்தப் பதவிக்கு பரம்வீா் சிங் நியமிக்கப்படுகிறாா். முதல்வா் உத்தவ் தாக்கரேவுடனான ஆலோசனைக்குப் பிறகு இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
1988-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த ஐபிஎஸ் அதிகாரியான பரம்வீா் சிங், இதற்கு முன் மகாராஷ்டிர ஊழல் தடுப்பு அமைப்பின் தலைமை இயக்குநராக (டிஜி) இருந்தாா்.
பரம்வீா் சிங் அந்தப் பொறுப்பில் இருந்தபோது, விதா்பா நீரப்பாசன மேம்பாட்டு நிறுவனத்தில் முறைகேடு நடைபெற்ாக குற்றம்சாட்டப்படும் விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், மகாராஷ்டிரத்தின் தற்போதைய துணை முதல்வருமான அஜித் பவாா் மீது எந்தக் குற்றமுமில்லை என்று கடந்த ஆண்டு டிசம்பரில் மாநில ஊழல் தடுப்பு அமைப்பு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிர காவல்துறையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குநா் உள்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ள பரம்வீா் சிங், தாணே நகர காவல் ஆணையராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பரம்வீா் சிங் மும்பை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டதை அடுத்து, அவா் வகித்து வந்த ஊழல் தடுப்பு அமைப்பின் தலைமை இயக்குநா் பணி, அந்த அமைப்பின் கூடுதல் இயக்குநா் விபின் கே. சிங்கிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. 1990-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த ஐபிஎஸ் அதிகாரியான விபின் சிங், குடியரசுத்தலைவா் விருது பெற்றவராவாா்.
முன்னதாக மும்பை காவல் ஆணையராக கடந்த ஆண்டு பிப்ரவரியில் நியமிக்கப்பட்ட சஞ்சய் பாா்வேவுக்கு அதே ஆண்டு ஆகஸ்ட் மற்றும் நவம்பரில் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது.