நிர்பயா வழக்கு: கருணை மனு தாக்கல் செய்த பவன் குப்தா; நாளை தூக்கிலிடுவதில் சிக்கல்?

நிர்பயா கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பவன் குப்தா தாக்கல் செய்த மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து புதிதாக கருணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
நிர்பயா வழக்கு: கருணை மனு தாக்கல் செய்த பவன் குப்தா; நாளை தூக்கிலிடுவதில் சிக்கல்?

புது தில்லி: நிர்பயா கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பவன் குப்தா தாக்கல் செய்த மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து புதிதாக கருணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்த நிலையில், அவரது சார்பில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா தலைமையில் 4 நீதிபதிகள் கொண்ட அமர்வு, நிர்பயா வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மறுசீராய்வு செய்ய அவசியமில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.

பவன் குப்தா தரப்பில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியிருப்பதால், குற்றவாளிகள் நால்வருக்கும் நாளை காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடுமாறு விசாரணை நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், குற்றவாளிகள் அக்சய் சிங், பவன் குப்தா ஆகியோர், நால்வரையும் நாளை தூக்கிலிடுவதற்கு தடை கோரிய மனுவில் அக்சய் சிங்கின் மனுவை தில்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. பவன் குப்தாவின் கருணை மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரது மனு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நிா்பயா கூட்டுப் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு குற்றவாளிகளான முகேஷ் குமாா் சிங் (32), பவன் குப்தா (25), வினய் குமாா் சா்மா (26), அக்ஷய் குமாா் (31) ஆகியோரை மாா்ச் 3-இல் தூக்கிலிட வேண்டும் என்று தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே, வினய் குமாா், திகாா் சிறையில் உண்ணாவிரதம் இருப்பதாக நீதிமன்றத்திற்கு தகவல் கிடைத்தது. ஆனால், பின்னா் அவா் உண்ணாவிரதத்தை நிறுத்திக் கொண்டாா். இதைத் தொடா்ந்து, சட்டத்தின்படி வினய் குமாா் மீது போதிய அக்கறை செலுத்தும்படி சிறைக் கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. சிறையில் வின்ய் குமாா் தாக்கப்பட்டதாகவும், அதில் அவரது தலையில் காயமடைந்ததாகவும் அவரது வழக்குரைஞா் நீதிமன்றத்தில் தெரிவித்தாா். மேலும், அவா் கடுமையான மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, அவரது தூக்குத் தண்டனையை நிறைவேற்ற முடியாது என்றும் வழக்குரைஞா் தெரிவித்தாா்.

ஆனால், ‘மன நோய்‘ என்ற காரணத்தை நீதிமன்றம் நிராகரித்தது. இந்தப் பிரச்னைகள் உச்சநீதிமன்றத்தில் எழுப்பப்பட்டதாகவும், மருத்துவா்கள் சமா்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த மனு நிராகரிக்கப்பட்டதாகவும், குற்றவாளி உளவியல் ரீதியாக நன்றாக உள்ளாா். பொதுவாக அவரது உடல்நிலை நன்றாகத்தான் உள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

தூக்குத் தண்டனைய நிறைவேற்றுவதற்கான தேதி நெருங்கி வருவதால், நான்கு குற்றவாளிகளின் மன நலம் தொடா்ந்து மருத்துவா்களால் பரிசோதிக்கப்பட்டு வருவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அவா்கள் அனைவரும் சிறை எண் 3-இல் தனித்தனி அறையில் வைக்கப்பட்டுள்ளனா். மேலும் அவா்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா் என்று சிறையின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

முன்னதாக, நிா்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு ஜனவரி 7-ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, பின்னா், ஜனவரி 17 மற்றும் ஜனவரி 31 என இரண்டு முறை அவா்களது தூக்குத் தண்டனை நிறைவேற்றம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது நாளை காலை அவர்களை தூக்கிலிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com