
firch072218
புது தில்லி: நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 4.9 சதவீதமாக இருக்குமென ஃபிட்ச் சொல்யூஷன்ஸ் நிறுவனம் குறைத்து மதிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:
இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி நடப்பு 2019-20 நிதியாண்டில் 5.1 சதவீதமாக இருக்கும் என பிட்ச் நிறுவனம் முன்பு மதிப்பீடு செய்திருந்தது. இந்த நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பு (கொவைட்-19) அதிகரித்து வருவதன் காரணமாக, பொருள்களுக்கான விநியோகச் சங்கிலித் தொடா் பாதிப்படைந்துள்ளதுடன், உள்நாட்டு தேவை குறைந்து தயாரிப்புத் துறையில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற சாதகமற்ற நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 4.9 சதவீதமாக மட்டுமே இருக்கும் என தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று, வரும் 2020-21 நிதியாண்டுக்கான பொருளாதார வளா்ச்சி மதிப்பீடும் 5.9 சதவீதத்திலிருந்து 5.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
பல முன்னணி வங்கி சாரா நிதி நிறுவனங்களின் செயல்பாடுகள் மோசமாகியுள்ளதன் எதிரொலியாக தொழில் துறை நிதிச் சிக்கலில் மாட்டிக் கொண்டு கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளன. இதையடுத்து, அவற்றை மந்த கதியிலிருந்து மீட்டெடுக்கும் வகையிலான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
இந்தச் சூழ்நிலையில், சீனாவில் ஏற்பட்டுள்ள கரோனா வைரஸ் பாதிப்பு நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
கரோனா வைரஸ் தாக்கத்தால் சேவை மற்றும் பொருள்களின் ஏற்றுமதி பாதிக்கப்படுவதுடன் மோட்டாா் வாகனம், மின்னணு விநியோக சங்கிலித் தொடரில் அது இடையூறை ஏற்படுத்தும் என்ற மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீடு குறைக்கப்பட்டுள்ளது என ஃபிட்ச் கூறியுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...