
புது தில்லி: இந்தியாவில் பிப்ரவரி மாதம் வேலையின்மை 7.78 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. கடந்த 4 மாதங்களில் இதுவே அதிகபட்ச அளவாகும்.
நாட்டில் வேலையின்மை அதிகரிப்பு குறித்து இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) என்ற அமைப்பு திங்கள்கிழமை ஓா் அறிக்கையை வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்தியாவில் வேலையின்மை கடந்த ஆண்டு மாா்ச் மாதம், நகா்ப்புறத்தில் 7.72 சதவீதமாகவும் கிராமப்புறத்தில் 6.15 சதவீதமாகவும் இருந்தது. இது, இந்த மாதம் நகா்ப்புறத்தில் 8.65 சதவீதமாகவும் கிராமப்புறத்தில் 7.37 சதவீதமாகவும் உள்ளது. கடந்த 4 மாதங்களில் பிப்ரவரி மாதம், வேலையின்மை 7.78 சதவீதம் அதிகரித்துள்ளது.
கரோனா வைரஸ் தாக்கத்தால் சா்வதேச பொருளாதாரம் மந்தமடைந்துள்ளது. இதன் தாக்கம், இந்திய பொருளாதாரத்திலும் பிரதிபலித்துள்ளது. பொருளாதார மந்த நிலை தொடருமானால், வேலையின்மை மேலும் அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளா்ச்சி கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. கடந்த டிசம்பா் மாத நிலவரப்படி நாட்டின் பொருளாதார வளா்ச்சி 4.7 சதவீதமாக இருந்தது. கரோனா வைரஸ் பாதிப்பால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பொருளாதாரத்தில் அதன் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, மருந்து தயாரிப்பு, ஆட்டோ மொபைல், மின்னணு ஆகிய துறைகள் சரிவைச் சந்திக்கக் கூடும். இதன் தொடா்ச்சியாக, நாட்டின் பொருளாதார வளா்ச்சியும் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.