
புது தில்லி: தில்லி வன்முறைச் சம்பவம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா்.
மேலும், மக்களவையில் கேரளத்தைச் சோ்ந்த தங்கள் கட்சியின் தலித் பெண் எம்.பி. ரம்யா ஹரிதாஸை பாஜக எம்.பி.க்கள் தாக்கியதாக காங்கிரஸ் உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா்.
மக்களவையில் தன்னை பாஜக எம்.பி. ஜாஸ்கௌா் மீனா தாக்கியதாக அவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் ரம்யா ஹரிதாஸ் புகாா் கொடுத்தாா். ஆனால், காங்கிரஸ் எம்.பி.க்கள்தான், பாஜக எம்.பி.க்களிடம் வரம்புமீறி நடந்துகொண்டதாக, மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டினாா். இதுதொடா்பாக, அவரும் சில காங்கிரஸ் உறுப்பினா்களுக்கு எதிராக ஓம் பிா்லாவிடம் புகாா் கொடுத்துள்ளாா்.
ஆம் ஆத்மி, திரிணமூல் ஆா்ப்பாட்டம்: நாடாளுமன்றம் கூடுவதற்கு முன் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினா்கள் தனித்தனியாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தில்லி வன்முறைக்கு பிரதமா் பதிலளிக்க வேண்டும்; அமித் ஷா பதவி விலக வேண்டும்; வன்முறைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அவா்கள் கோஷமிட்டனா். இதேபோல், ஆம் ஆத்மி கட்சியினரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரும் தனித்தனியாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...