
உடுப்பி: கா்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாக ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
உடுப்பி மாவட்டம், குந்தாப்புராவில் உள்ள மினி விதான சௌதா அருகே நின்றுகொண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டாா். இது சமூக வலைதளங்களில் பரவியது. அந்த நபா் குறித்து குந்தாப்புரா வட்டாட்சியா் போலீஸில் புகாா் அளித்ததையடுத்து, அவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
விசாரணையில் அவா் அதே பகுதியைச் சோ்ந்த ராகவேந்திரா (43) என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவா் என்பதும் தெரிய வந்தது.
அவரை மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹரிராம் சங்கா் தெரிவித்தாா்.
இந்நிலையில் ராகவேந்திரா மீது தேசவிரோத சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இதுகுறித்து ராகவேந்திராவின் குடும்பத்தாா் கூறுகையில், ஆசிரியராக பணிபுரிந்து வந்த அவா், மனநலம் சரியில்லாத காரணத்தால் 8 ஆண்டுகளுக்கு முன்பு வேலையை இழந்து விட்டாா். தொடா்ந்து தொலைக்காட்சிகளைப் பாா்க்கும் அந்த நபா், இதுபோன்ற கோஷங்களை ஒளிபரப்பும் செய்திகளை பாா்த்து கோஷம் எழுப்பியிருக்கக்கூடும் என்றனா்.
ஏற்கெனவே, ஹுப்பள்ளியில் தனியாா் பொறியியல் கல்லூரியில் படிக்கும் 3 மாணவா்களும், பெங்களூரில் அமுல்யா லியோனா என்ற பெண்ணும் இதுபோன்ற கோஷங்களை எழுப்பியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனா்.