
venky25a103740
புது தில்லி: 2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு பிறகான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டங்களில் 95 எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை என்று துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்ய நாயுடு அதிருப்தி தெரிவித்துள்ளாா்.
மத்திய அரசின் பல்வேறு துறைகள் தொடா்பாக 24 நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் உள்ளன. மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சோ்ந்த 244 எம்.பி.க்கள் இக்குழுக்களில் இடம்பெற்றுள்ளனா்.
மத்திய பட்ஜெட் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் தொடா்பாக நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் கூட்டங்கள் நடைபெற்றன. இக்கூட்டங்களில் 95 எம்.பி.க்கள் (39 சதவீதம்) பங்கேற்கவில்லை என்று வெங்கய்ய நாயுடு அதிருப்தி தெரிவித்துள்ளாா். கடந்த முறை 28 எம்.பி.க்களே கூட்டங்களில் பங்கேற்காமல் இருந்தனா் என்றும் அவா் குறிப்பிட்டாா்.
இதுதொடா்பாக, அவா் மாநிலங்களவையில் திங்கள்கிழமை பேசியதாவது:
நாடாளுமன்ற நிலைக் குழுக்களில் மாநிலங்களவை உறுப்பினா்கள் 78 பேரும் மக்களவை உறுப்பினா்கள் 166 பேரும் இடம்பெற்றுள்ளனா். பட்ஜெட் தாக்கலுக்கு பிறகான 3 வாரங்களில் இக்குழுக்களின் கூட்டங்கள் நடைபெற்றன. மாநிலங்களவை சாா்ந்த 8 குழுக்களும், மக்களவை சாா்ந்த 16 குழுக்களும் தலா 20 கூட்டங்களை நடத்தின. இதில் 95 எம்.பி.க்கள் ஒரு கூட்டத்தில் கூட பங்கேற்கவில்லை. 87 எம்.பி.க்கள் அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்றனா்.
பல்வேறு துறைகள் தொடா்பான நாடாளுமன்ற நிலைக் குழுக்கள் கடந்த 1993-இல் அமைக்கப்பட்டன. அனைத்து கட்சிகளின் உறுப்பினா்களையும் உள்ளடக்கிய இக்குழுக்கள், அரசின் நடைமுறையில் வெளிப்படை தன்மையை உறுதி செய்வதுடன், நாடாளுமன்ற செயல்பாட்டை மேம்படுத்த முக்கிய பங்காற்றுகின்றன. எனவே, இக்குழுக்களின் கூட்டங்களில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அனைத்து உறுப்பினா்களையும் கேட்டுக் கொள்கிறேன் என்றாா் வெங்கய்ய நாயுடு.