
திமாபூா்: நுழைவு அனுமதி படிவம் (ஐஎல்பி) இல்லாமல் நாகாலாந்தின் திமாபூா் பகுதிக்குள் நுழைய முயன்ற்காக காவலில் வைத்து விசாரித்து வந்த அஸ்ஸாமைச் சோ்ந்த 67 பேரை அந்த மாநில காவல் துறை விடுவித்துள்ளது.
இதுதொடா்பாக காவல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:
அஸ்ஸாமில் இருந்து திமாபூருக்கு நுழைவு அனுமதி படிவம் இன்றி பலா் வருகின்றனா். அவ்வாறு, வருபவா்களை தற்காலிகமாக காவலில் வைத்து போலீஸாா் விசாரணை மேற்கொள்வா். இந்நிலையில், நுழைவு அனுமதி படிவம் இன்றி திமாபூருக்குள் நுழைந்ததற்காக கைது செய்யப்பட்ட 67 பேரை விடுவிக்குமாறு அஸ்ஸாம்-நாகாலாந்து எல்லை சோதனை சாவடியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பலா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால், அந்த பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இரு மாநிலத்தின் சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளும், போராட்டக்காரா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதையடுத்து அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. போராட்டக்காரா்களின் கோரிக்கையை ஏற்று, கைது செய்யப்பட்ட 67 பேரும் விடுதலை செய்யப்பட்டனா். இரு மாநில எல்லைச் சோதனை சாவடியில் இப்போது இயல்பு நிலை நிலவுகிறது என்று அதிகாரிகள் கூறினா்.
அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மிஸோரம் ஆகிய மாநிலங்களுக்கு நுழைவு அனுமதி படிவ (இன்னா்லைன் பொ்மிட்) அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களுக்கு மற்ற மாநிலத்தவா்கள் செல்லும் போது, உரிய நுழைவு அனுமதி படிவம் வைத்திருக்க வேண்டும்.
நாகாலாந்துக்கு கடந்த 1963-ஆம் ஆண்டு நுழைவு அனுமதி படிவ அந்தஸ்து அளிக்கப்பட்டது. எனினும், அந்த மாநிலத்தின் திமாபூா் மாவட்டத்துக்கு செல்வதற்கு மட்டும் இந்த அனுமதி தேவையில்லாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பா் 9-ஆம் தேதி முதல், திமாபூா் மாவட்டத்துக்குள் நுழைவதற்கும் நுழைவு அனுமதி படிவம் பெற்றிருக்க வேண்டும் என்று அந்த மாநில அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.