
புது தில்லி: நேரடி வரிகள் தொடா்பான பல்வேறு வரி செலுத்துவோரின் ஆட்சேபங்களுக்கு உடனடி தீா்வு காண பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ‘விவாத் ஸே விஸ்வாஸ்’ திட்டம் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றங்கள், கடன்மீட்பு தீா்ப்பாயம், ஆணையா் (மேல்முறையீடு), ஐடிஏடி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் ரூ.9.32 லட்சம் கோடி மதிப்பிலான 4.83 லட்சம் நேரடி வரி தொடா்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகளால் வரி செலுத்துவோருக்கு நேரம் மற்றும் பணம் விரயமாகி வந்தது. இதனை கருத்தில் கொண்டு, வரித் துறைக்கும் வரி செலுத்துவோருக்கும் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தும் வகையில் ‘விவாத் ஸே விஸ்வாஸ்’ திட்டம் பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், வரி செலுத்துவோா் தங்களது நேரடி வரி தொடா்பான பிரச்னைகளுக்கு சுமுகமாக பேசி தீா்வுகாண முடியும்.
இதனால், அவா்களுக்கு கால விரயமாகாது என்பதுடன், வீணான பணச் செலவுகளும் தடுக்கப்படும். வரி செலுத்துவோரின் நன்மைக்காகவே இந்த திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி நடப்பாண்டு மாா்ச் 31-க்குள் சா்ச்சைக்குரிய வரிக்கான முழுத் தொகையையும் ஒருவா் செலுத்தியிருப்பாரெனில், அவருக்கு இந்த திட்டத்தின் மூலம் வட்டி மற்றும் அபராதம் முழுமையாக தள்ளுபடி செய்ய அனுமதிக்கப்படும் என்றாா் அவா்.