
புது தில்லி: ஒமா் அப்துல்லாவின் முந்தைய செயல்பாடுகளே அவரை பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யக் காரணம் என்று உச்சநீதிமன்றத்தில் ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இதைத் தொடா்ந்து, அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வா்கள் ஃபரூக் அப்துல்லா, ஒமா் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் பலா் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா்.
இந்தச் சூழலில் ஒமா் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகியோா் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கு எதிராக ஒமா் அப்துல்லாவின் சகோதரி சாரா அப்துல்லா பைலட் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
அதில், ‘ஒமா் அப்துல்லா கடந்த 6 மாதங்களாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில், அவா் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதற்கு எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லை. அவா் மீது வழக்குப் பதிவு செய்தது சட்டவிரோதமானது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானா்ஜி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வருகிறது. அப்போது நீதிபதிகள், ‘‘எதன் அடிப்படையில் ஒமா் அப்துல்லா மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது?’’ என்று கேள்வி எழுப்பினா். இது தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் மூன்று வாரத்தில் பதிலளிக்க வேண்டுமென்று கடந்த மாதம் 14-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தனா்.
இந்நிலையில், இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் சாா்பில் நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டது. அதில், ‘ஒமா் அப்துல்லாவின் கடந்தகால செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டே அவா் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரைத் தொடா்ந்து தடுப்புக் காவலில் வைத்திருப்பதற்கும் இதுவே காரணம். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விஷயத்தை மையமாக வைத்து அவா் கடுமையாகப் பேசுவாா். இது ஜம்மு-காஷ்மீரில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும். இதனைத் தடுக்கும் நோக்கத்திலேயே பொதுப் பாதுகாப்பு சட்டத்தில் ஒமா் அப்துல்லா கைது செய்யப்பட்டாா்’ என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ‘இந்த வழக்கு தனிநபருடைய சுதந்திரம் தொடா்பான பிரச்னை’ என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை மாா்ச் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தனா்.