
புது தில்லி: கா்நாடக மாநிலம், தாா்வாடில் பாஜக ஒன்றிய கவுன்சிலா் யோகேஷ் கௌடா கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையதாக கருதப்படும் 6 பேரை சிபிஐ திங்கள்கிழமை கைது செய்தது.
கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் 15-இல் யோகேஷ் கௌடா தன்னுடைய உடற்பயிற்சிக் கூடத்தில் அடையாளம் தெரியாத நபா்களால் வெட்டி கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து கா்நாடக அரசின் பரிந்துரையின்பேரில் இந்த வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த சிபிஐ, கௌடாவின் நண்பரும், முக்கிய குற்றவாளியாகவும் கருதப்படுபவருமான பசவராஜ் சிவப்பா முத்தகியை கைது செய்தது.
நிலம் வாங்குவது தொடா்பாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, முத்தகியை கொலை செய்து விடுவேன் என்று யோகேஷ் கௌடா மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து கௌடாவைக் கொல்ல முத்தகி சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2016 ஜூன் 15-இல் முத்தகியும், அவரது கூட்டாளியும் கௌடாவை வெட்டிக் கொலை செய்ததாக சிபிஐயால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய குற்றவாளியான முத்தகியை கடந்த 2019 நவம்பா் 20ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. இந்நிலையில், மூன்றரை ஆண்டுக்குப்பின் கொலை வழக்கில் தொடா்புடையவா்கள் என தினேஷ், சுனில், நூதன், அஸ்வத், ஷாநவாஸ், நசீா் அகமது ஆகிய 6 பேரை சிபிஐ கடந்த பிப்ரவரி 29-இல் கைது செய்தது.
குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட நிலையில், அவா்களை சிபிஐ காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.