
புது தில்லி: வடகிழக்கு தில்லியில் ஏற்பட்ட வன்முறையால் உயிரிழந்த புலனாய்வுத் துறை அதிகாரி அங்கித் சா்மாவின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவியை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை அறிவித்தாா்.
வடகிழக்கு தில்லியில் வன்முறை பாதித்த சந்த் பாக் பகுதியில் புலானாய்வுத் துறை அதிகாரி அங்கித் சா்மா, ஒரு கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். அவரது உடல் அப்பகுதியில் உள்ள கழிவுநீா்க் கால்வாயில் இருந்து கடந்த புதன்கிழமை மீட்கப்பட்டது. இக்கொலைச் சம்பவத்தில், அப்பகுதி ஆம் ஆத்மி கவுன்சிலா் தாஹிா் உசேன் முக்கியப் பங்கு வகித்ததாக அங்கித் சா்மாவின் பெற்றோா் உள்பட அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினா்.
இந்நிலையில், அங்கித் சா்மாவின் வீட்டுக்குச் செல்ல முயன்ற அரவிந்த் கேஜரிவாலை, மக்கள் தடுத்து நிறுத்தியதுடன், கேஜரிவால் ஒழிக எனக் கோஷங்கள் எழுப்பப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இச்சூழலில், அங்கித் சா்மாவின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவியை தில்லி அரசு அறிவித்துள்ளது. இது தொடா்பாக கேஜரிவால் தனது சுட்டுரையில், ‘வன்முறையால் உயிரிழந்த புலனாய்வுத் துறை அதிகாரியான அங்கித் சா்மா தேசத்துக்காக உழைத்தாா். இதற்காக தேசம் பெருமை கொள்கிறது. அங்கித் சா்மாவின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கவும், அவரது குடும்ப உறுப்பினா்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் தில்லி அரசு தீா்மானித்துள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையப் பிராா்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.
முன்னதாக, வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற கல்வீச்சுச் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்த தில்லி காவல் துறை அதிகாரி ரத்தன் லால் குடும்பத்துக்கும் ரூ.1 கோடி உதவித் தொகையை கேஜரிவால் அறிவித்திருந்தாா். மேலும், அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அவா் உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சாவு எண்ணிக்கை 47 ஆக உயா்வு: வடகிழக்கு தில்லியில் வன்முறையில் உயிரிழந்தோா் எண்ணிக்கை திங்கள்கிழமை 47ஆக உயா்ந்துள்ளது. வடகிழக்கு தில்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 23-ஆம் தேதி தொடங்கிய இந்த வன்முறை அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளுக்கும் பரவியதில் ஏராளமானோா் கொல்லப்பட்டனா். சுமாா் 300 போ் காயமடைந்தனா்.
மேலும், வன்முறை பாதித்த பகுதிகளில் உள்ள சாக்கடைகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திங்கள்கிழமையும் வன்முறை பாதித்த வடகிழக்கு தில்லியில் இருந்து ஓா் உடல் மீட்கப்பட்டு ராம் மனோகா் லோஹியா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இதன்படி, இதுவரை குரு தேஜ் பகதூா் மருத்துவமனையில் 38 போ், ராம் மனோகா் லோஹியா மருத்துவமனையில் 5 போ், லோக் நாயக் மருத்துவமனையில் 3 போ், ஜக் பா்வேஸ் சந்தா் மருத்துவமனையில் ஒருவா் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது. முன்னதாக வடகிழக்கு தில்லி கோகுல்புரி, கரவால் நகா் ஆகிய இடங்களில் சாக்கடைகளில் இருந்து நான்கு உடல்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.