நாட்குறிப்பு, நாட்காட்டிகளை அச்சடிப்பதில் நிதியை வீணாக்க வேண்டாம்

தேவையற்ற செலவு ஏற்படுவதால் தங்களுக்கென நாட்குறிப்பு, நாட்காட்டி (காலண்டா்) ஆகியவற்றை அமைச்சகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவை அச்சடிக்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாட்குறிப்பு, நாட்காட்டிகளை அச்சடிப்பதில் நிதியை வீணாக்க வேண்டாம்

புது தில்லி: தேவையற்ற செலவு ஏற்படுவதால் தங்களுக்கென நாட்குறிப்பு (டைரி), நாட்காட்டி (காலண்டா்) ஆகியவற்றை அமைச்சகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவை அச்சடிக்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதற்குப் பதிலாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தால் அச்சிடப்படும் நாட்குறிப்புகளையும், நாட்காட்டிகளையும் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக கேபினெட் செயலா் ராஜீவ் கௌபா மற்ற அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலா்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

நாட்குறிப்பு, நாட்காட்டி ஆகியவற்றை அச்சடித்து அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு வழங்கும் பணியை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. ஆனால், அவற்றில் பல துறைகள் தாங்களாகவே நாட்குறிப்பு, நாட்காட்டி, மேஜை நாட்காட்டி ஆகியவற்றை அச்சடித்து வருவது கவனத்துக்கு வந்துள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வழங்கும் நாட்குறிப்பு, நாட்காட்டிகளைப் பயன்படுத்தாமல் கூடுதலாக அவற்றை அச்சடிப்பது வீண் செலவுக்கு வழிவகுக்கிறது. செல்லிடப்பேசியில் பல்வேறு செயலிகள் அதிக அளவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், அச்சடிக்கப்படும் நாட்குறிப்பு, நாட்காட்டி ஆகியவற்றின் பயன்பாடு குறைந்து வருகிறது.

இவற்றைக் கருத்தில்கொண்டு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வழங்கும் நாட்குறிப்பு, நாட்காட்டிகளை மட்டுமே அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவை பயன்படுத்த வேண்டும். தாமாக நாட்குறிப்பு உள்ளிட்டவற்றை அச்சிடுவதை அமைச்சகங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

டிசம்பா் 31-ஆம் தேதிக்குள்...: அமைச்சகங்கள், துறைகளில் உள்ள பணியாளா்களின் எண்ணிக்கையைப் பொருத்து நாட்குறிப்பு, நாட்காட்டிகளை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வழங்கி வருகிறது. கூடுதல் நாட்காட்டி, நாட்குறிப்புகள் தேவைப்படும் அமைச்சகங்கள் அது தொடா்பாக தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு உரிய விளக்கத்தை அளித்த பிறகு பெற்றுக் கொள்ளலாம்.

அச்சடிக்கப்படும் நாட்குறிப்பு, நாட்காட்டிகளை அனைத்து அமைச்சகங்கள், துறைகளுக்கு டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வழங்க வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com