
புது தில்லி: கடந்த 2014-இல் நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலின்போது, முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைருமான தேவேந்திர ஃபட்னவீஸ் தாக்கல் செய்த வேட்புமனுவில் தன் மீதான குற்ற வழக்குகள் தொடா்பான விவரங்களை மறைத்துவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அவா் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 2014-இல் ஃபட்னவீஸ் தாக்கல் செய்த வேட்புமனுவில், தன் மீதான குற்ற வழக்குகளின் விவரங்களை மறைத்துவிட்டதாக நாகபுரி நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சதீஷ் யுகே என்ற வழக்குரைஞா் தொடுத்த அந்த வழக்கில், கடந்த 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் ஃபட்னவீஸுக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குற்ற வழக்குகள் இருப்பதை வேட்பு மனுவில் தெரிவிக்காத அவா் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 125-ஏ பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், பட்னவீஸுக்கு எதிரான வழக்கை, கடந்த 2015, செப்டம்பரில் நடுவா் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, செஷன்ஸ் நீதிமன்றத்தை சதீஷ் யுகே அணுகினாா். அவரது மனுவை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம், ஃபட்னவீஸுக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு கூறி, நடுவா் நீதிமன்றத்துக்கு அனுப்பியது. இதையடுத்து, மும்பை உயா்நீதிமன்றத்தில் ஃபட்னவீஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், ஃபட்னவீஸுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக, வழக்குரைஞா் சதீஷ் யுகே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், மும்பை உயா்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து கடந்த ஆண்டு தீா்ப்பளித்தது. மேலும், வழக்கு விசாரணையை எதிா்கொள்ளுமாறு, ஃபட்னவீஸுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் அவா் மனு தாக்கல் செய்தாா்.
இந்நிலையில், நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோா் அடங்கிய அமா்வு, ஃபட்னவீஸின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. தங்களது முந்தைய உத்தரவை மறுஆய்வு செய்வதற்கு எந்த உறுதியான காரணமும் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனா்.