
நிகிதா கெளல்
சென்னை: காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற தாக்குதலில் கணவன் மரணமடைந்த நிலையில், தற்போது ராணுவத்தில் மனைவி இணைந்துள்ள நெகிழ வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 40 சி.ஆர்.பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.
இதில் மேஜர் விபூதி தௌண்டியலும் ஒருவர். இவரது மனைவி நிகிதா கெளல் (26) . கணவர் இறந்த சமயத்தில் அவர் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தி நிகிதா வெளியிட்ட உருக்கமான விடியோ சமூங்க ஊடகங்களில் பரவலாக கவனம் பெற்றது. அந்த விடியோவிற்கு பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்தனர்.
நொய்டாவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த நிகிதா தனது மாமியாரின் வழிகாட்டுதலின்படி ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்பினார். இதற்காக ராணுவத்தில் சேர்வதற்கான நுழைவு தேர்வில் பங்கேற்றுள்ளார். தௌண்டியல் ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்ததால் நிகிதாவிற்கு தேர்வில் வயது வரம்பு தளர்வு அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது முடிவுகள் வெளியாகி நிகிதாவிற்கு சென்னையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் இருந்து பயிற்சியில் சேர அழைப்பு வந்திருக்கிறது.
இந்த் சம்பவம் குறித்து நிகிதாவின் மாமியார் கூறும் போது, 'அவள் ஒரு தைரியமான பெண். அவளை எனது மகளைப் போலவே பார்த்து வந்தேன். ராணுவத்தில் இருந்து வந்த அழைப்பு வந்த செய்தியை அவளின் பெற்றோர்களிடம் பகிர்வது போல் என்னிடம் பகிர்ந்து கொண்டாள்' என்று தெரிவித்தார்.