மகளிர் தினம்: மகாராஷ்டிரத்தில் 'ஒருநாள் கலெக்டர்' ஆகும் பள்ளி மாணவிகள்!

மகளிர் தினத்தையொட்டி, மகாராஷ்டிரத்தின் புல்தானா மாவட்ட நிர்வாகம் அரசுப் பள்ளி மாணவிகள் 'ஒருநாள் கலெக்டர்' ஆக செயல்படலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
மகளிர் தினம்: மகாராஷ்டிரத்தில் 'ஒருநாள் கலெக்டர்' ஆகும் பள்ளி மாணவிகள்!

மகளிர் தினத்தையொட்டி, மகாராஷ்டிரத்தின் புல்தானா மாவட்ட நிர்வாகம், பெண்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதன்படி, அரசுப் பள்ளி மாணவிகளுக்கு அவர்களது நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் 'ஒருநாள் கலெக்டர்' ஆக செயல்படலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இதன் மூலமாக நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்தும், சமூக மற்றும் பிற பிரச்னைகளை எதிர்கொள்வது குறித்தும் மாணவிகள் தெரிந்துகொள்ள உதவும் என்று புல்தானா மாவட்ட கலெக்டர் சுமன் சந்திரா தெரிவித்தார். 

மேலும், 'பெண்கள் சமுதாயத்தில் என்ன மாற்றங்களை கொண்டு வர விரும்புகிறார்கள் என்பதை தீர்மானிக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கும். மாணவிகள் தங்கள் இலக்கை நோக்கி நம்பிக்கையுடன் செல்லவும், அவர்களைச் சுற்றியுள்ள மற்ற மாணவிகளையும் சிறப்பாகச் செயல்பட உதவும்' என்றும் தெரிவித்தார். 

மாவட்ட நிர்வாகத்திற்குட்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் 'ஒரு நாள் கலெக்டர்' அனுபவத்தை பெறலாம் என்றும் விருப்பமுள்ளவர்கள் அந்தந்த பள்ளிகளின் வாயிலாக மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று, மல்கப்பூர் தாலுகாவில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளியைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி மரியா 'ஒருநாள் கலெக்டர்' ஆக இருக்கிறார். அவர் ஒரு மக்கள்தொகை கணக்கெடுப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு கணக்கெடுப்பு எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதை புரிந்துகொள்வார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளின் பயிற்சி திட்டத்தை அவர் மேற்பார்வையிடுவார். அதேபோன்று ஜில்லா பரிஷத் பள்ளியைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு மாணவி பூனம் தேஷ்முக், 'ஒருநாள் கலெக்டர்' ஆக மாவட்ட நிர்வாகப் பணிகளை மேற்பார்வையிட்டார்.

இவர்களைப் போன்ற மாணவிகள் ஒருநாள் கலெக்டராக தங்களது அனுபவத்தை, கற்றுக்கொண்டவற்றை மகளிர் தின நிகழ்ச்சியில் வெளிப்படுத்துவார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பெண்களின் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டு மாவட்ட நிர்வாகம் இந்த வாரத்தினை 'பிங்க் வீக்' என்று கொண்டாடுகிறது.

இரத்த சோகை, மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் உள்ளிட்ட  நோய்களுக்கு பெண்களுக்கு இலவச பரிசோதனை முகாம்களை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com