பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம்

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் இருந்து காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம்


பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் இருந்து காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த திங்கள்கிழமை தொடங்கி ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த 3 நாள்களாக நாடாளுமன்றத்தில் தில்லி வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ஹோலி பண்டிகை முடிந்தபிறகு தில்லி வன்முறை குறித்து விவாதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.

இருப்பினும், காங்கிரஸ் கட்சி தில்லி வன்முறை குறித்து விவாதிப்பதில் உறுதியாக இருந்தது. இதன்காரணமாக, பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் மூன்று நாள்கள் முடங்கியது.

இந்நிலையில், தில்லி வன்முறை குறித்து விவாதிப்பது தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் மக்களவையில் கோஷங்கள் எழுப்பினர். இதன் காரணமாக மக்களவை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதன்பிறகு பிற்பகல் 3 மணிக்கு அவை மீண்டும் கூடியது. அப்போது மீனாக்ஷி் லெகி அவையை வழிநடத்தினார்.

இந்நிலையில், அவைத் தலைவர் மேசையில் இருந்த ஆவணங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எடுத்துச் சென்றனர். இதையடுத்து, தவறான நடத்தை மூலம் அவை விதிகளை மீறியதாக கௌரவ் கோகோய், டிஎன் பிரதாபன், டீன் குரியகோஸ், ஆர் உன்னிதன், மாணிக்கம் தாகூர், பென்னி பெனான் மற்றும் குர்ஜீத் சிங் ஆகிய 7 காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்களின் பெயரை மீனாக்ஷி் லெகி குறிப்பிட்டார். அவைத் தலைவரால் பெயர் குறிப்பிட்ட பிறகு, பெயர் குறிப்பிடப்பட்ட உறுப்பினரால் அன்றைய தின நாடாளுமன்ற நிகழ்வுகளில் பங்கேற்க முடியாது.

இதையடுத்து, நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேரை இடைநீக்கம் செய்வது தொடர்பாக  நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் தீர்மானம் கொண்டு வந்தார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேரையும் உடனடியாக அவையைவிட்டு வெளியேறுமாறு மீனாக்ஷி் லெகி கேட்டுக்கொண்டார். தொடர்ந்து மக்களவையையும் அவர் நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

முன்னதாக, உறுப்பினர்கள் அவர்களது இருக்கைகளில் அமராமல் இருந்தால், இடைநீக்கம் செய்யப்படும் என மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கடந்த செவ்வாய்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com