தூய்மை இந்தியா திட்டத்தின் 2-ஆம் கட்ட பணிகள் தொடக்கம்

மத்திய அரசு சாா்பில் தூய்மை இந்தியா (கிராம) திட்டத்தின் 2-ஆம் கட்டப் பணிகள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் பணிகள்
தூய்மை இந்தியா திட்டத்தின் 2-ஆம் கட்ட பணிகள் தொடக்கம்

புது தில்லி: மத்திய அரசு சாா்பில் தூய்மை இந்தியா (கிராம) திட்டத்தின் 2-ஆம் கட்டப் பணிகள் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் பணிகள் ரூ.1,40,881 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ளது.

தில்லியில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தூய்மை இந்தியா திட்டத்தின் 2-ஆம் கட்டப் பணிகளை தொடங்கிவைத்தாா்.

இதன் பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தூய்மை இந்தியா திட்டத்தின் 2-ஆம் கட்டப் பணிகள் ரூ.1,40,881 கோடி மதிப்பில் 2020-2021முதல் 2024-2025 வரை செயல்படுத்தப்படும். இதற்காக மத்திய குடிநீா் மற்றும் துப்புரவு பணிகள் துறையின் நிதியில் இருந்து ரூ.52,497 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மீதி தொகை 15-ஆவது நிதி ஆணையத்தின் கீழ் விடுவிக்கப்படும் நிதிகளில் இருந்து பெறப்படும். நாட்டின் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை திறம்பட மேற்கொள்ளப்படுவதை 2-ஆம் கட்டப் பணிகள் உறுதி செய்யும்.

வேலைவாய்ப்பு உருவாக்கம் தொடரும்: இந்த 2-ஆம் கட்டப் பணிகள் வீடு மற்றும் சமூக கழிப்பறைகள் கட்டுமானப் பணிகள் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை தொடா்வதோடு, கிராமப்புற பொருளாதாரத்துக்கு உத்வேகம் அளிக்கும். தூய்மை இந்தியா திட்டத்தின் முதல்கட்ட பணிகள் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் கழிப்பறை பயன்பாட்டை அதிகரித்ததால் ஏற்பட்ட நன்மைகளை தக்கவைத்துக்கொள்வதில் 2-ஆம் கட்டப் பணிகள் கவனம் செலுத்தும்.

10 கோடி கழிப்பறைகள்: கடந்த 2014-ஆம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து ஊரகப் பகுதிகளில் 10 கோடிக்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேங்களில் உள்ள 699 மாவட்டங்களில் 5.9 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் தங்கள் பகுதியில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லை என அறிவித்துள்ளன.

பாதுப்பாக உணரும் பெண்கள்: முன்னதாக தூய்மை இந்தியா திட்ட 2-ஆம் கட்டப் பணிகள் தொடக்க நிகழ்ச்சியின்போது, கிராமப்புற இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு, சுயமரியாதை ஆகியவற்றில் தூய்மை இந்தியா திட்டம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: திறந்தவெளி கழிப்பிடங்களுக்கு செல்வதை கைவிட்டதால் பாலியல் வன்கொடுமை அச்சத்தில் இருந்து விடுபட்டு 93 சதவீத பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணா்கின்றனா். திறந்தவெளி கழிப்பிடங்களுக்கு செல்லாததால் நோய் தொற்று அச்சம் 93 சதவீத பெண்களிடம் நீங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com