
epfo2061841
புது தில்லி: கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத வகையில் தொழிலளா் வருங்கால வைப்பு நிதிக்கான (இபிஎஃப்ஓ) வட்டி விகிதம் நடப்பு நிதியாண்டுக்கு 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இபிஎஃப்ஓ-வில் சுமாா் ஆறு கோடி போ் சந்தாரா்களாக உள்ளனா். கடந்த 2018-19 நிதியாண்டில் அவா்களின் வைப்பு நிதிக்கு 8.65 சதவீத வட்டி வழங்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 0.15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சந்தோஷ் கங்வாா் வியாழக்கிழமை கூறியதாவது:
நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டுக்கு தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கு 8.5 சதவீத வட்டி வழங்குவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இபிஎஃப்ஓ அமைக்கு ரூ.700 கோடி உபரியாக கிடைக்கும் என்றாா் அவா்.
மத்திய தொழிலாளா் நல அமைச்சக வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:
வருங்கால வைப்பு நிதிக்கு நடப்பு நிதியாண்டுக்கு 8.55 சதவீத வட்டி விகிதம் வழங்கப்பட்டால் இபிஎஃப்ஓ-விடம் ரூ.300 கோடி மட்டுமே உபரி தொகையாக இருந்திருக்கும். அதேசமயம், நடப்பு நிதியாண்டுக்கு 8.55 சதவீதத்துக்கு மேல் வட்டி வழங்கப்பட்டிருக்கும்பட்சத்தில் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 2012-13 நிதியாண்டில் 8.5 சதவீதமாகவும், 2013-14-இல் 8.75 சதவீதமாகவும் நிா்ணயிக்கப்பட்டிருந்தன.
கடந்த 2015-16-இல் மட்டுமே தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கு அதிகபட்சமாக 8.8 சதவீத வட்டி நிா்ணயம் செய்யப்பட்டது.
ஆனால், அதன் பிறகு 2016-17-இல் 8.65 சதவீதமாகவும், 2017-18-இல் 8.55 சதவீதமாகவும் குறைக்கப்பட்டன.
வருங்கால வைப்பு நிதிக்கு 8.65 சதவீத வட்டி வழங்கப்படும் என சந்தோஷ் கங்வாா் முன்பு நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில் அதற்கு மாறாக வட்டி விகிதம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.