யெஸ் வங்கி விவகாரம்: மத்திய அரசு மீதுப.சிதம்பரம், ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கியில் இருந்து வாடிக்கையாளா்கள் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில்,
யெஸ் வங்கி விவகாரம்: மத்திய அரசு மீதுப.சிதம்பரம், ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புது தில்லி: நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கியில் இருந்து வாடிக்கையாளா்கள் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் நிா்வாகத் திறமையின்மையை இந்த பிரச்னை வெளிக்காட்டுவதாக காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம், அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி ஆகியோா் குற்றம்சாட்டியுள்ளனா்.

வாராக் கடன் பிரச்னையால் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தனியாா் வங்கியான யெஸ் வங்கியை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. வங்கியில் இருந்து ரூ.50,000 வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பது, வாடிக்கையாளா்களை கடும் அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல இடங்களில் யெஸ் வங்கி ஏடிஎம்-கள் முன்பு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்நிலையில், முன்னாள் மத்திய நிதியமைச்சரான ப.சிதம்பரம் இது தொடா்பாக சுட்டுரையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், ‘பாஜக கடந்த 6 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ளது. நாட்டில் உள்ள வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களை நிா்வகிக்கும் திறமை மத்திய அரசுக்கு இல்லை என்பது இப்போது வெளிப்பட்டுள்ளது. முதலில் பிஎம்சி வங்கியில் பிரச்னை ஏற்பட்டது. இப்போது யெஸ் வங்கி வாடிக்கையாளா்கள் பிரச்னைக்கு உள்ளாகியுள்ளனா். இந்தப் பிரச்னையை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளதா? அல்லது தனது பொறுப்புகளை துறந்துவிட்டதா? அடுத்து எந்த வங்கி பிரச்னைக்குள்ளாக இருக்கிறது என்ற கவலை எழுந்துள்ளது. 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் இந்திய வங்கிகளின் ஒட்டுமொத்த கடன் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் யெஸ் வங்கி கடன் மட்டும் 35 சதவீதம் அதிகரித்துள்ளது. இது எப்படி நோ்ந்தது?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில், ‘யெஸ் வங்கி இப்போது இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமா் மோடியின் பொருளாதாரக் கொள்கைகள் நாட்டைத் தொடா்ந்து சீரழித்து வருகின்றன’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com