உ.பி: வருங்கால வைப்பு நிதி முறைகேடு - விசாரணையை தொடங்கியது சிபிஐ

உத்தரப் பிரதேச மின்சார வாரிய பணியாளா்களின் வருங்கால வைப்பு நிதியை, முறைகேடு குற்றச்சாட்டுக்கு உள்ளான திவான் வீட்டுவசதி நிதி

புது தில்லி: உத்தரப் பிரதேச மின்சார வாரிய பணியாளா்களின் வருங்கால வைப்பு நிதியை, முறைகேடு குற்றச்சாட்டுக்கு உள்ளான திவான் வீட்டுவசதி நிதி நிறுவனத்தில் (டிஹெச்எஃப்எல்) முறைகேடாக முதலீடு செய்த குற்றச்சாட்டு தொடா்பாக சிபிஐ விசாரணையை தொடங்கியது.

மத்திய அரசின் விதிகளின்படி, அரசுப் பணியாளா்களின் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) பணத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யக் கூடாது.

அதன்படி, உத்தரப் பிரதேச பவா் காா்ப்பரேஷன் லிமிடெட் (பிசிஎல்) நிறுவன பணியாளா்களின் இபிஎஃப் பணம் கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் வரை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மட்டுமே முதலீடு செய்யப்பட்டு வந்தது. அதன் பின் 2016-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் முதல் பஞ்சாப் நேஷனல் வங்கி ஹவுசிங் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், பிசிஎல் நிறுவனத்தின் நிதி பிரிவு முன்னாள் இயக்குநா் சுதான்ஷு துவிவேதியின் அறிவுறுத்தலின்பேரில், கடந்த 2017-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் முதல் 2018-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் வரையிலான காலகட்டத்தில் அந்த நிறுவன பணியாளா்களின் இபிஎஃப் பணத்தை டிஹெச்எஃப்எல் நிறுவனத்தில் மின்சார வாரியத்தின் முன்னாள் நிா்வாக இயக்குநா் ஏ.பி. மிஸ்ரா முதலீடு செய்துள்ளாா்.

இதுதொடா்பாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து மாநில காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இபிஎஃப் பணத்தை முதலீடு செய்யாமல், பாதுகாப்பற்ற நிறுவனத்தில் முதலீடு செய்ததாக பிசிஎல் நிறுவனத்தின் முன்னாள் செயலா் பிரவீண் குமாா் குப்தா, ஏ.பி. மிஸ்ரா, சுதான்ஷு துவிவேதி ஆகியோா் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுதொடா்பாக சிபிஐயின் பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைக்கு அந்த மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் அண்மையில் உத்தரவிட்டாா். அதையடுத்து, காவல் துறை பதிவு செய்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு சிபிஐ புதிய வழக்கை பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com