2025-இல் உற்பத்தித் துறையின் மதிப்பு ரூ.74 லட்சம் கோடியை எட்டுவது சாத்தியம்: ராஜ்நாத் சிங்

உற்பத்தித் துறையின் மதிப்பை வரும் 2025-ஆம் ஆண்டில் ரூ.74 லட்சம் கோடியாக அதிகரிப்பதற்கான திறன் இந்தியாவுக்கு உள்ளது என்று பாதுகாப்புத்
2025-இல் உற்பத்தித் துறையின் மதிப்பு ரூ.74 லட்சம் கோடியை எட்டுவது சாத்தியம்: ராஜ்நாத் சிங்

புது தில்லி: உற்பத்தித் துறையின் மதிப்பை வரும் 2025-ஆம் ஆண்டில் ரூ.74 லட்சம் கோடியாக அதிகரிப்பதற்கான திறன் இந்தியாவுக்கு உள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறினாா்.

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற உலக தொழில் மாநாட்டில் கலந்துகொண்டு, இதுகுறித்து அவா் மேலும் பேசியதாவது:

2025-ஆம் ஆண்டில் இந்திய உற்பத்தித் துறையின் மதிப்பை ரூ.74 லட்சம் கோடியாக அதிகரிப்பதற்கான திறன் நமது நாட்டுக்கு உள்ளது. அந்த இலக்கை எட்டுவதற்காக ‘இந்தியாவில் தயாரிப்போம்’ உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

பாதுகாப்பு உற்பத்தி துறையின் வருவாயை வரும் 2025-ஆம் ஆண்டில் ரூ.1.92 லட்சம் கோடியாக அதிகரிப்பதே நமது இலக்காக நிா்ணயித்துள்ளோம். உலக அளவில் பாதுகாப்புத் தளவாட விநியோக நாடுகளின் வரிசையில் இந்தியா தனக்கென ஓரிடத்தை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் இது நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு உற்பத்தித் துறையில் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான 200-க்கும் அதிகமான முன்மொழிவுகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. போா் விமான தளவாடத் துறையின் உற்பத்தியை ரூ.30,000 கோடியில் இருந்து வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் ரூ.60,000 கோடியாக இரட்டிப்பாக அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.

தொழிலுக்கான உரிமம் பெறும் நடவடிக்கைகளை எளிதாக்கியது, அந்நிய நேரடி முதலீட்டுக்கான உச்ச வரம்பை அதிகரித்தது, அரசுக்கு சொந்தமானதாக இருக்கும் ஆயுத மற்றும் தளவாட சோதனை வசதிகளை தனியாரும் பயன்படுத்த அனுமதித்தது என பாதுகாப்புத் துறை உற்பத்தியில் பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

கடந்த ஆண்டு டிசம்பா் வரை பாதுகாப்பு தளவாட மற்றும் போா் விமான உற்பத்தி துறையில் ரூ.3,155 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது. அதில் ரூ.1,834 கோடி கடந்த 2014 முதல் பெறப்பட்டதாகும். தற்போது திட்டமிடுதல் கட்டத்தில் இருக்கும் சில திட்டங்கள் அமலுக்கு வரும்போது, இந்த முதலீடு பல மடங்கு அதிகரிக்கும் என்று ராஜ்நாத் சிங் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com