மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் பதவி விலகல்: கமல்நாத் அரசுக்கு சிக்கல்

மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 
மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் பதவி விலகல்: கமல்நாத் அரசுக்கு சிக்கல்


மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 

பெங்களூருவில் தங்க வைக்கப்பட்டிருக்கும் இவர்கள் 19 பேரும், தங்களது பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால், 15 மாதமே ஆன கமல்நாத் தலைமையிலான மத்தியப் பிரதேச அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் சில அமைச்சர்கள் உட்பட 19 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியில் இருந்து விலகியுள்ளனர். 

இரண்டு மின்னஞ்சல்களில் எம்எல்ஏக்களின் பதவி விலகல் கடிதங்கள் இணைக்கப்பட்டு கிடைக்கப் பெற்றதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

ஹோலி கொண்டாட லக்னௌ சென்றிருக்கும் மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன், மாநில அரசியல் நிலவரத்தை முன்னிட்டு, தனது பயணத்தை முடித்துக் கொண்டு விரைவாக மத்தியப் பிரதேசம் திரும்ப உள்ளார்.

ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் 6 அமைச்சர்கள் உட்பட 20 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பதால், 230 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் தற்போது 114 எம்எல்ஏக்களைக் கொண்டிருக்கும் காங்கிரஸ் அரசின் பலம் 94 இடங்களாகக் குறைந்துவிடும். 

தற்போது மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் இரண்டு எம்எல்ஏக்கள் பதவி காலியாக உள்ளது. மேலும் 20 எம்எல்ஏக்கள் பதவி விலகியிருப்பதால், மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 208 ஆகக் குறைந்துவிடும். எனவே சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 105 இடங்கள் போதுமானதாகும். தற்போது பாஜகவின் மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 107 என்பது குறிப்பிடத்தக்கது.

மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு 2 பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள், ஒரு சமாஜவாதி எம்எல்ஏ, 4 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆகியோரின் ஆதரவு உள்ளது.

எனவே, தற்போதுள்ள 94 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் இந்த ஏழு எம்எல்ஏக்களின் ஆதரவையும் சேர்த்தாலும் 101 எம்எல்ஏக்களின் பலம்தான் இருக்கும். எனவே பெரும்பான்மையை நிரூபிக்க 4 எம்எல்ஏக்கள் குறைவாக இருப்பதால், கமல்நாத் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com