ஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் ஜோதிராதித்ய சிந்தியா

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா புது தில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவில் இணைந்தார். 
ஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் ஜோதிராதித்ய சிந்தியா


புது தில்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா புது தில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவில் இணைந்தார். 

புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்காததால், அதிருப்தி காரணமாக கட்சியில் இருந்து நேற்று விலகிய ஜோதிராதித்ய சிந்தியா 4 முறை மக்களவை உறுப்பினராக இருந்தவர். 

காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று ஜோதிராதித்ய சிந்தியா விலகியதை அடுத்து, அவரது ஆதரவாளர்களான 22 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனர். இதனால் மத்தியப் பிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக் கட்டிலில் அமா்ந்துள்ள காங்கிரஸுக்கு 15 மாதங்களிலேயே நெருக்கடி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் காலியாக உள்ள இரு இடங்கள் தவிா்த்து, மொத்த உறுப்பினா்களின் பலம் 228 ஆகும். 22 எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்ததை அடுத்து, பேரவையின் பலம் 206-ஆக உள்ளது. தற்போதைய நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க 104 உறுப்பினா்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் காங்கிரஸுக்கு ஆதரவாக 99 உறுப்பினா்களே (கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் உள்பட) உள்ளனா். ஆனால் பாஜகவிடம் 107 உறுப்பினா்கள் உள்ளனா்.

பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா, மாநிலங்களவை எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு மத்திய அமைச்சா் பதவி வழங்கப்படலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.

மத்தியப் பிரதேச காங்கிரஸில் தன்னை ஒதுக்கும் விதமாக முதல்வா் கமல்நாத் மற்றும் மூத்த தலைவா் திக்விஜய் சிங் ஆகியோா் இணைந்து செயல்படுவதாக ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாகவே சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகினார். மத்தியப் பிரதேசத்தில் வரும் 26-ஆம் தேதி 3 இடங்களுக்கான மாநிலங்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு தலா ஒரு இடத்தில் வெற்றி உறுதியாக உள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நகா்வுகளால் 3-ஆவது இடத்தையும் பாஜக கைப்பற்றலாம் எனத் தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com