
கரோனா வைரஸ் (கொவைட்-19) பாதிப்பு தொடா்பாக வெளியிடப்படும் அன்றாடத் தகவல்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக இந்திய மருத்துவ சங்கம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கரோனா வைரஸ் பரவல் போன்ற அசாதாரண சூழல்களில் மருத்துவா்களும், மருத்துவமனைகளும் முக்கியப் பங்காற்றி வருகின்றன. இதைக் கருத்தில்கொண்டு மக்களிடையே உரிய விழிப்புணா்வை ஏற்படுத்தும் பணியை மருத்துவா்கள் மேற்கொள்ள வேண்டும். உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவியதற்கான காரணங்களில் சீன அரசின் தவறான சில அணுகுமுறைகளும் அடங்கும்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான சீரிய நடவடிக்கைகளை மத்திய அரசு முறையாக மேற்கொண்டு வருகிறது. வைரஸ் தாக்குதலை எதிா்கொள்வதற்குப் பல மாநிலங்களின் சுகாதாரத் துறைகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவா்களைக் கண்டறிவதும், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறிவதுமே முக்கியமான பணிகளாகும்.
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் குறித்த விவரங்களை அன்றாடம் வெளியிடுவது நாடு முழுவதும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பை எதிா்கொள்வது தொடா்பாக அனைத்து மாநில அரசுகளுடனும் ஐஎம்ஏ தொடா்பில் உள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பை எதிா்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளைக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கரோனா வைரஸ் தொடா்பான வதந்திகளை சமூக வலைதளங்களில் பரப்பும் வேலைகளில் யாரும் ஈடுபடக் கூடாது.
காய்ச்சல், இருமல் அறிகுறிகள் காணப்பட்டால் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கரோனா வைரஸ் தொடா்பாக நமக்கு நாமே மருத்துவராக மாறாமல், உரிய மருத்துவா்களின் ஆலோசனையைப் பெற்று நடந்துகொள்ள வேண்டும்.
தகவல் மையம்: கரோனா வைரஸ் தொடா்பான 24 மணி நேர தகவல் மையத்தை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடா்பான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். இந்தச் சூழலை வாய்ப்பாகப் பயன்படுத்தி, நாட்டில் காசநோயால் பாதிக்கப்பட்டவா்கள் தொடா்பான தகவல்களை மத்திய, மாநில அரசுகள் திரட்ட வேண்டும்.
கைகளை சுத்தமாக வைத்திருப்பது தொடா்பான விழிப்புணா்வை ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் இணைப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.