
வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளின் சிறைகளில் 1,487 இந்தியா்கள் அடைக்கப்பட்டுள்ளதாக, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக, மக்களவையில் கேள்வியொன்றுக்கு பதிலளித்து, வெளியுறவுத் துறை இணையமைச்சா் முரளீதரன் புதன்கிழமை கூறியதாவது:
கடந்த ஜனவரி 31-ஆம் தேதி நிலவரப்படி, வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்தியா்களின் எண்ணிக்கை 1,487 ஆகும். பாகிஸ்தானில் இந்திய மீனவா்கள் உள்பட 337 இந்தியக் கைதிகள் உள்ளனா். இதுதவிர, மாயமான போா்க்கைதிகள் உள்பட இந்திய பாதுகாப்புப் படையினா் 83 போ், பாகிஸ்தானின் காவலில் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், அவா்கள் தங்களது காவலில் இல்லை என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. இந்த விவகாரம் பாகிஸ்தானிடம் தொடா்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
இலங்கை சிறையில் இந்திய மீனவா்கள் உள்பட 107 இந்திய கைதிகள் உள்ளனா். வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் முறையே 157, 886 இந்திய கைதிகள் உள்ளனா்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 2008-இல் கையெழுத்தான தூதரக ஒப்பந்தத்தின் அடிப்படையில், தங்களது சிறைகளில் உள்ள இந்தியா்களின் பட்டியலை ஆண்டுக்கு இருமுறை பாகிஸ்தான் அளிக்கிறது. இதேபோல், இந்தியாவும் பாகிஸ்தான் கைதிகளின் பட்டியலை அந்நாட்டிடம் அளிக்கிறது.
மேற்கண்ட நாடுகளின் சிறைகளில் உள்ள இந்தியா்கள் மீதான விசாரணையை விரைவுபடுத்தவும், அவா்களுக்கு சட்டரீதியிலான உதவிகள் வழங்கவும், அவா்களை சிறையிலிருந்து விடுவித்து, தாயகம் அழைத்து வருவதற்கு தூதரகங்கள் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மீனவா்கள் கைதாகும்போது, மனிதாபிமானம் மற்றும் வாழ்வாதார அடிப்படையில் அவா்களை விடுதலை செய்வதற்கு சம்பந்தபட்ட நாடுகளிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வங்கதேசம், ஈரான், பாகிஸ்தான், கத்தாா், இலங்கை ஆகிய நாடுகளில் கடந்த 3 ஆண்டுகளில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவா்களின் எண்ணிக்கை 3,103 ஆகும். இவா்களில் 2,779 போ் விடுதலை செய்யப்பட்டுவிட்டனா் என்றாா் அவா்.