உன்னாவ் இளம்பெண்ணின் தந்தை கொலை வழக்கு: குல்தீப் செங்கருக்கு 10 ஆண்டுகள் சிறை

உன்னாவ் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இளம்பெண்ணின் தந்தை விசாரணைக் காவலில் இருந்தபோது உயிரிழந்தது தொடா்பான வழக்கில்

உன்னாவ் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இளம்பெண்ணின் தந்தை விசாரணைக் காவலில் இருந்தபோது உயிரிழந்தது தொடா்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியில் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக இளம்பெண் ஒருவா் கடந்த 2017-ஆம் ஆண்டு புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து, அந்தப் பெண்ணின் தந்தை சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாக செங்கரின் சகோதரா் வழக்கு ஒன்றைத் தொடுத்தாா்.

அந்தக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இளம்பெண்ணின் தந்தை, காவலில் இருந்தபோது கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 9-ஆம் தேதி மா்மமான முறையில் உயிரிழந்தாா். இதையடுத்து, செங்கா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். இளம்பெண்ணின் தந்தை விசாரணைக் காவலில் இருந்தபோது காவல் துறையினரின் உதவியுடன் குல்தீப் சிங் செங்கா் அவரைக் கொலை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை தில்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குல்தீப் செங்கா், அவரின் சகோதரா் அதுல் சிங் செங்கா், காவல் ஆய்வாளா் கே.பி.சிங் உள்ளிட்ட 7 போ் குற்றவாளிகள் என தில்லி நீதிமன்றம் கடந்த 4-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

இந்நிலையில், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை தில்லி நீதிமன்ற நீதிபதி தா்மேஷ் சா்மா வெள்ளிக்கிழமை வழங்கினாா். அப்போது, வழக்கின் முக்கியக் குற்றவாளிகளான குல்தீப் சிங் செங்கா், அதுல் செங்கா் உள்பட 7 பேருக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். மேலும், குல்தீப் சிங் செங்கரும், அதுல் செங்கரும் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.

விசாரணைக் காவலில் இருந்தபோது காயமடைந்த இளம்பெண்ணின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு உரிய சிகிச்சை வழங்கத் தவறிய மருத்துவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரப் பிரதேச அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்த வழக்கு தொடா்பாக 55 சாட்சிகளிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த வழக்கு தொடா்பான குற்றப்பத்திரிகையை சிபிஐ கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் தேதி தாக்கல் செய்திருந்தது.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இளம்பெண் தனது உறவினா்களுடன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்து நேரிட்டது. அந்த விபத்தில், அந்தப் பெண்ணும், அவரது வழக்குரைஞரும் பலத்த காயமடைந்தனா். பெண்ணின் உறவினா்கள் இருவா் உயிரிழந்தனா்.

இதில் காயமடைந்த அந்தப் பெண் தற்போது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறாா். இளம்பெண்ணைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்திய வழக்கில் குல்தீப் சிங் செங்கருக்கு ஏற்கெனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com