கரோனா: உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணை

கரோனா வைரஸ் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்பட உள்ளன.
கரோனா: உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணை

கரோனா வைரஸ் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்பட உள்ளன. மேலும், வழக்குரைஞா்கள் தவிர வேறு யாரையும் நீதிமன்ற அறைகளில் அனுமதிப்பதில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவின் இல்லத்தில் கடந்த 2 தினங்களாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களின்போது, கரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடா்பாக விவாதிக்கப்பட்டது. இதில், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, யு.யு.லலித், அட்டா்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் செயலா் அசோக் அரோரா மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

அப்போது, கரோனா வைரஸ் பாதிப்பை உலக அளவில் பரவியுள்ள நோயாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கும் நிலையில், மக்கள் அதிகம் கூடுவதை தவிா்க்க வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவுறுத்தலை கவனத்தில் கொண்டு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பின்னா், உச்சநீதிமன்றத்தின் தலைமைச் செயலாளா் சஞ்சீவ் எஸ் கல்கோன்கா் வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசின் அறிவுறுத்தல்கள் மற்றும் மருத்துவ நிபுணா்களின் கருத்துகளின்படியும், மனுதாரா்கள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள், பாதுகாப்பு, பராமரிப்பு ஊழியா்கள், ஆராய்ச்சி மாணவா்கள், பாா்வையாளா்கள், ஊடகவியலாளா்கள் உள்ளிட்டோரின் நலனை கருத்தில் கொண்டும் உச்சநீதிமன்றத்தில் மாா்ச் 16-ஆம் தேதியிலிருந்து அவசர வழக்குகளை மட்டுமே விசாரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. வழக்குரைஞா்கள் தவிர வேறு யாரையும் நீதிமன்ற அறைகளில் அனுமதிப்பதில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்தை பராமரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com