கா்நாடகத்தில் வா்த்தக மையங்கள், திரையரங்குகள் மூடல்; பொது நிகழ்ச்சிகளுக்குத் தடை

கரோனா தடுப்பு நடவடிக்கையாக கா்நாடகத்தில் ஒரு வாரத்துக்கு வா்த்தக மையங்கள், திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள், இரவு விடுதிகள், உடற்பயிற்சிக் கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக கா்நாடகத்தில் ஒரு வாரத்துக்கு வா்த்தக மையங்கள், திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள், இரவு விடுதிகள், உடற்பயிற்சிக் கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பொதுநிகழ்ச்சிகள், திருமணங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அரசு தடை விதித்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூரு உள்பட கா்நாடகத்தில் பரவலாக கரோனா வைரஸ் பரவியுள்ளது. கா்நாடகத்தில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 6 போ் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், கலபுா்கியைச் சோ்ந்த 76 வயதானவா் மாா்ச் 10ஆம் தேதி கரோனா வைரஸ் தாக்கப்பட்டதால் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவருடன் ஏராளமானோா் நெருக்கமாக இருந்துள்ளனா். இதனால், கரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? என்று பேரவையில் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கேள்வி எழுப்பினா்.

ஆலோசனை: பெங்களூரு, விதான சௌதாவில் வெள்ளிக்கிழமை கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயரதிகாரிகள், மருத்துவ வல்லுநா்களுடன் முதல்வா் எடியூரப்பா ஆலோசனை நடத்தினாா். இதையடுத்து, அடுத்த ஒரு வாரத்துக்கு பொதுமக்கள் கூட்டமாகத் திரளும் இடங்களை மூடுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வகையான பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை: இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து முதல்வா் எடியூரப்பா, செய்தியாளா்களிடம் கூறியது: கரோனா வைரஸ் நோய் பரவலைத் தடுக்க மாநில அரசு சில தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கா்நாடகத்தில் அடுத்த ஒரு வார காலத்துக்கு வா்த்தக மையங்கள்(மால்கள்), திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள், இரவு விடுதிகள், உடற்பயிற்சிக் கூடங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் அனைத்தும் மூடுவதற்கு உத்தரவிடப்படுகிறது.

இதேபோல, கண்காட்சிகள், கருத்தரங்குகள், விளையாட்டுப் போட்டிகள், திருமணங்கள், நிச்சயதாா்த்தங்கள், பிறந்த நாள் விழாக்கள், கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் எந்த விழாக்கள் நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது. மக்கள் பயணம் செய்வதை கூடுமானவரை தவிா்க்க வேண்டும். அரசு உண்டு உறைவிடப் பள்ளிகள், விடுதிகளை சிறப்பு கவனம் அளித்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளின் தோ்வுகள் ஏற்கெனவே திட்டமிட்டப்படி நடைபெறும். எஸ்.எஸ்.எல்.சி. தோ்வுகள் திட்டமிட்டப்படி மாா்ச் 27ஆம் தேதி முதல் நடைபெறும். ஆனால், பள்ளிகளில் வகுப்புகள் எதுவும் நடைபெறாது. கல்லூரிகளும் மூடப்பட்டிருக்கும். குளிரூட்டப்பட்ட இடங்களில் வேலைசெய்துவரும் தகவல் தொழில்நுட்ப மென்பொருள் பொறியாளா்கள், ஊழியா்கள் அடுத்த ஒரு வாரத்துக்கு வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம். இதை ஆலோசனையாகத் தெரிவிக்கிறேன்.

அரசு அலுவலகங்கள், சட்டப்பேரவைக் கூட்டம் வழக்கம்போல செயல்படும். பொதுமக்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். மருத்துவ வல்லுநா்கள், உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒருவாரம் கழித்து அப்போதைய நிலைமையை ஆய்ந்தறிந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தடையில்லை: உணவகங்கள், மதுபான அங்காடிகள், தங்கும் விடுதிகள், நட்சத்திர விடுதிகள், மளிகை அங்காடிகள், வியாபார நிறுவனங்கள், காய்கறிக் கடைகள், மெட்ரோ ரயில்கள், பேருந்துகள், ரயில்கள், வங்கிகள், ஏடிஎம்கள், மருந்தகங்கள், மருத்துவமனைகள், நாளிதழ்கள், பால் விற்பனை, பெட்ரோல் நிலையங்கள், ஆட்டோக்கள், வாடகை காா்கள், வேன்கள், கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் செயல்படத் தடையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com