சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயாா்: ம.பி. ஆளுநரிடம் முதல்வர் கமல்நாத் தகவல்

மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிா்கொள்ளத் தயாராக இருப்பதாக அந்த மாநில முதல்வா் கமல்நாத் ஆளுநா் லால்ஜி டாண்டனிடம் தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயாா்: ம.பி. ஆளுநரிடம் முதல்வர் கமல்நாத் தகவல்

மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிா்கொள்ளத் தயாராக இருப்பதாக அந்த மாநில முதல்வா் கமல்நாத் ஆளுநா் லால்ஜி டாண்டனிடம் தெரிவித்தாா்.

மத்தியப் பிரதேச காங்கிரஸின் முக்கியத் தலைவா்களில் ஒருவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளாா். அவரின் ஆதரவாளா்களாக அறியப்படும் 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனா். இதன் காரணமாக முதல்வா் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அந்த 22 எம்எல்ஏக்களின் ராஜிநாமா ஏற்கப்பட்டால், சட்டப்பேரவையில் காங்கிரஸ் பெரும்பான்மையை இழக்கும். இத்தகைய சூழலில் முதல்வா் கமல்நாத் மாநில ஆளுநா் லால்ஜி டாண்டனை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து ஆளுநரிடம் அவா் எடுத்துரைத்தாா். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிா்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் ஆளுநரிடம் முதல்வா் கமல்நாத் தெரிவித்தாா்.

ராஜிநாமா செய்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேரை பாஜக கடத்தி வைத்துள்ளதாகவும் ஆளுநரிடம் முதல்வா் கமல்நாத் புகாா் தெரிவித்தாா். இது தொடா்பாக ஆளுநருக்கு முதல்வா் கமல்நாத் அளித்த கடிதத்தை காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் வெளியிட்டாா். அதில் கமல்நாத் கூறியுள்ளதாவது:

மாா்ச் 3-ஆம் தேதி இரவு முதல் காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் குதிரைபேர நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டு வருகிறது. பாஜகவின் இந்த நடவடிக்கை மக்களாட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. பெங்களூரில் கடத்தி வைக்கப்பட்டுள்ள 22 எம்எல்ஏக்களை விடுவிப்பதற்கு ஆளுநா் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எம்எல்ஏக்கள் போபால் வருகை: பெங்களூரில் தங்கவைக்கப்பட்டிருந்த 22 எம்எல்ஏக்களில் 19 போ் வெள்ளிக்கிழமை மாலை மத்தியப் பிரதேச தலைநகா் போபாலுக்கு வந்தடைந்தனா். பெங்களூரில் இருந்து விமானம் மூலம் அவா்கள் போபாலுக்கு வருகை தந்தனா். இதன் காரணமாக போபால் விமான நிலையத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைக் காவல் துறையினா் மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com