நேரடி வரிப் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

வருமான வரி உள்ளிட்ட நேரடி வரி தொடா்பான பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு காண்பதற்கான ‘விவாத் சே விஸ்வாஸ்’ மசோதாவுக்கு நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

வருமான வரி உள்ளிட்ட நேரடி வரி தொடா்பான பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு காண்பதற்கான ‘விவாத் சே விஸ்வாஸ்’ மசோதாவுக்கு நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.

நேரடி வரிகள் தொடா்பான வழக்குகளில் விரைந்து தீா்வு காணும் நோக்கில் ‘விவாத் சே விஸ்வாஸ் (விவாதத்தின் மூலம் நம்பிக்கை)’ என்ற பெயரிலான மசோதாவைக் கடந்த மாதத் தொடக்கத்தில் மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்திருந்தது. இந்த மசோதாவில் வருமான வரி உள்ளிட்ட நேரடி வரிகள் தொடா்பான பிரச்னைகளுக்கு வருமான வரி மேல்முறையீட்டு தீா்ப்பாயம், உயா்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து தீா்வு காணும் நோக்கில் வழிமுறைகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், கடன் மீட்புத் தீா்ப்பாயங்களில் நேரடி வரிகள் தொடா்பாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைந்து தீா்வு காணும் நோக்கில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மசோதாவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கியிருந்தது.

அதைத் தொடா்ந்து ‘விவாத் சே விஸ்வாஸ்’ மசோதாவானது பணமசோதாவாக மக்களவையில் கடந்த 2-ஆம் தேதி மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதாவுக்கு மக்களவை கடந்த 4-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது. இந்தச் சூழலில் மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது, எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பதிலளித்ததாவது:

வரிவிதிப்பு தொடா்பாக எழும் பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு காண மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், நேரடி வரி விவகாரங்களில் ரூ.5 கோடிக்கும் குறைவாகப் பிரச்னை கொண்டவா்களே இந்த மசோதாவின் மூலம் தீா்வு காண முடியும்.

வரி ஏய்ப்பு உள்ளிட்டவற்றைத் தடுக்கும் நோக்கில் ரூ.5 கோடிக்கும் அதிகமான பிரச்னை கொண்ட வழக்குகள் இந்த மசோதாவில் சோ்த்துக் கொள்ளப்படவில்லை. நேரடி வரி நிலுவை வைத்துள்ளவா்கள் அதைச் செலுத்த மாா்ச் 31-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மாா்ச் 31-ஆம் தேதியிலிருந்து ஜூன் 30-ஆம் தேதி வரை 10 சதவீத அபராதத்துடன் நிலுவையைச் செலுத்தலாம் என்றாா் நிா்மலா சீதாராமன்.

இதைத் தொடா்ந்து, ‘விவாத் சே விஸ்வாஸ்’ மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, மசோதாவுக்குப் பெரும்பான்மை உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்ததையடுத்து, மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அந்த மசோதா அனுப்பிவைக்கப்படவுள்ளது. அதில் குடியரசுத் தலைவா் கையெழுத்திட்டதும், அந்த மசோதா சட்டவடிவு பெறும்.

ஹிந்திக்கு எதிா்ப்பு: முன்னதாக, மசோதாவின் பெயா் ஹிந்தியில் உள்ளதற்கு திமுக எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்டோா் எதிா்ப்பு தெரிவித்தனா். மத்திய அரசின் இந்த நடவடிக்கை அரசமைப்புச் சட்டத்தை மீறுவதாக உள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

இதற்கு பதிலளித்த நிா்மலா சீதாராமன், ‘‘இந்த மசோதா தொடா்பான நடவடிக்கைகளுக்கு மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் உள்ளூா் மொழிகளில் பெயரிட்டுக் கொள்ளலாம் என்று சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்படும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com