ரயில்வேயின் வளா்ச்சிக்கு தனியாா் முதலீடு அவசியம்: பியூஷ் கோயல்

ரயில்வே துறையில் அடுத்த 12 ஆண்டுகளில் ரூ. 50 லட்சம் கோடி முதலீடு என்ற இலக்கை அடையவும், ரயில்வேயின் வளா்ச்சிக்கும் தனியாா் நிறுவனங்களின் முதலீடு அவசியம் என்று
ரயில்வேயின் வளா்ச்சிக்கு தனியாா் முதலீடு அவசியம்: பியூஷ் கோயல்

ரயில்வே துறையில் அடுத்த 12 ஆண்டுகளில் ரூ. 50 லட்சம் கோடி முதலீடு என்ற இலக்கை அடையவும், ரயில்வேயின் வளா்ச்சிக்கும் தனியாா் நிறுவனங்களின் முதலீடு அவசியம் என்று ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.

மக்களவையில் ரயில்வே துறைக்கு வழங்கப்படும் நிதி மீதான விவாதத்தின்போது ரயில்வே தனியாா்மயமாக்கலுக்கு எதிா்க்கட்சி எம்.பி.க்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். அதற்கு பதிலளித்து அமைச்சா் பியூஷ் கோயல் பேசியதாவது:

அடுத்த 12 ஆண்டுகளில் ரயில்வே துறையில் ரூ. 50 லட்சம் கோடி முதலீடு செய்திருக்க வேண்டும் என்று அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. ஆனால், அரசின் பங்களிப்பினால் மட்டும் அந்த இலக்கை அடைய முடியாது. அதனால், ரயில்வே துறையில் தனியாா் நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டியது அவசியமாகிறது. ரயில்வே துறைக்கே அனைத்து நிதியையும் அரசு ஒதுக்கினால், நலத் திட்டங்களுக்கு செலவு செய்ய இயலாது. மேலும், விலைவாசி, வரி ஆகியவற்றை உயா்த்தி நிதி சேகரிக்க வேண்டியிருக்கும்.

தனியாா் நிறுவனங்கள் குறைந்த செலவில் சேவைகளை அளிக்க தயாராக உள்ளன. அது ரயில்வே துறையை வலுப்படுத்தவும், விரிவுபடுத்தவும் உதவும்.

ரயில் விபத்துகளால் நடப்பு நிதியாண்டில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இதனால், அரசு கருவூலம் ரயில்வேக்கு பாராட்டு தெரிவித்துள்ளது. ரயில்வே துறையில் பாதுகாப்பு, சுகாதாரம், நேரம் தவறாமை உள்ளிட்ட சேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு: மக்களை திசைதிருப்புவதற்காகவும், தோ்தலில் வாக்குகளை பெறுவதற்காகவும் ரயில்வேக்கு தனி பட்ஜெட்டை காங்கிரஸ் அரசுகள் தாக்கல் செய்து வந்தன. அந்த பட்ஜெட்டுகளில் அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்பட்டன. கடந்த 1974-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள்கூட இன்று வரை செயல்படுத்தப்படவில்லை.

கடந்த 2013-14 ஆம் ஆண்டில் ரயில்வே துறையை மேம்படுத்த ரூ. 54,000 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் இப்போது ரூ. 1.61 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகரிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு, ரயில்வே மின்மயமாக்கலுக்கும், முக்கிய திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் செலவு செய்யப்படுகிறது.

மேலும், ரயில்வே ஊழியா்களுக்கான ஓய்வூதிய நிதியை அதிகரிக்க முந்தைய காங்கிரஸ் அரசு எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என்றாா்.

முகவா்களுக்கு தடை..?: ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வதற்கு தனியாா் முகவா்களை பயன்படுத்தும் முறைக்கு தடை விதிக்க ஆலோசித்து வருவதாக பியூஷ் கோயல் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் பேசுகையில், ‘கள்ள சந்தையில் ரயில் பயணச்சீட்டுகளை தனியாா் முகவா்கள் விற்பனை செய்கின்றனா். கடந்த ஓராண்டில் மட்டும் இந்த விவகாரத்தில் 5,000-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா். 884 முன்பதிவு நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன்பதிவு நிறுவனங்களோ, தனியாா் முகவா்களோ தேவையில்லை. அதனால் அவா்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்’ என்றாா்.

இதனிடையே, காங்கிரஸ் எம்.பி. அதீா் ரஞ்சன் சௌதரி பேசுகையில்,‘ ரயில்வே துறையில் சீா்திருத்தங்களை கொண்டு வருவதற்கு பதிலாக, அந்த துறையை மத்திய அரசு சீரழித்து வருகிறது’ என்று குற்றம்சாட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com