திருமலையில் ஆர்ஜித சேவைகள் நிறுத்தம்

திருமலையில் நடத்தப்பட்டு வரும் ஆர்ஜித சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி கோவில்
திருப்பதி கோவில்

திருப்பதி: திருமலையில் நடத்தப்பட்டு வரும் ஆர்ஜித சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஏழுமலையானுக்கு தினமும் பல ஆர்ஜித சேவைகள் திருமலையில் நடத்தப்பட்டு வருகின்றன. உற்சவர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்த சேவைகளில் பக்தர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இதற்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்கின்றனர்.

இந்நிலையில் கரோனா வைரஸ் தடுப்புக்காக, பக்தர்கள் ஓரிடத்தில் கூடுவûதைத் தடுக்க தேவஸ்தானம் தினசரி திருமலையில் நடத்தப்பட்டு வரும் ஆர்ஜித சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்தச் சேவைகள் அனைத்தும் ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

அதன்படி, விசேஷ பூஜை, வசந்தோற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், டோலாற்சவம் (ஊஞ்சல் சேவை), சகஸ்ர கலசாபிஷேகம், கல்யாணோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை ஆகிய ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட் பெற்ற பக்தர்கள் அவற்றின் தேதிகளை மாற்றிக் கொள்ளலாம்; அல்லது ரத்து செய்து கொள்ளலாம். அவ்வாறு ரத்து செய்பவர்களுக்கு பணம் திருப்பிச் செலுத்தப்படும். ரத்து செய்ய விரும்பாதவர்கள் திருமலையில் உள்ள கூடுதல் செயல் அதிகாரி அலுவலகம் சென்று ஆர்ஜித சேவைகளுக்கு பதிலாக விஐபி பிரேக் முறையில் தரிசன அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மேலும், வரும் வெள்ளிக்கிழமை முதல் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கைக்குழந்தைகளின் பெற்றோர்கள் ஆகியோருக்கான முதன்மை தரிசனங்கள் ரத்து செய்யப்படுவதுடன் அங்கப் பிரதட்சண டோக்கன் வழங்குவதும் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com