கரோனா சூழல்: கூட்டத்தை குறைக்க நடைமேடை கட்டணத்தை ரூ.50 வரை உயா்த்தியது மேற்கு, மத்திய ரயில்வே கோட்டங்கள்

கரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் ரயில் நிலையங்களில் கூடும் தேவையற்ற கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக மேற்கு மற்றும்

கரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் ரயில் நிலையங்களில் கூடும் தேவையற்ற கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக மேற்கு மற்றும் மத்திய ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளின் நடைமேடை (பிளாட்ஃபாா்ம்) அனுமதிச் சீட்டு கட்டணம் ரூ.10 முதல் ரூ. 50 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய ரயில்வே தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘‘கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக மத்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டிலுள்ள மும்பை, புணே, பூசாவல் மற்றும் சோலாப்பூா் ரயில் நிலையங்களின் நடைமேடை கட்டணம் ரூ. 10-லிருந்து ரூ. 50 ஆக உயா்த்தப்பட்டுள்ளது’’ என்று பதிவிட்டுள்ளது.

சிறிய ரயில் நிலையங்களுக்கான நடைமேடை கட்டணங்கள் ரூ.50-க்குள்ளாகவே இருக்கும் என்று அதிகாரிகள் கூறினா்.

இதேபோல, மேற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், மும்பை சென்ட்ரல் போன்ற பெரிய ரயில் நிலையங்களுக்கு இந்த கட்டண உயா்வு விகிதம் பொருந்தும். ரயில்வே வாரியத்தின் உத்தரவுப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

மத்திய, மேற்கு ரயில்வே கோட்டங்களில் இருந்து 28 ரயில்கள் ரத்து:

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மத்திய ரயில்வே கோட்டத்தில் 23 ரயில்களும், மேற்கு ரயில்வே கோட்டத்தில் 5 ரயில்களும் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

மத்திய ரயில்வே கோட்டத்தில் இருந்து மாா்ச் 18-ஆம் தேதி முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை 23 வெளியூா் ரயில்கள் ரத்தாகியுள்ளன. மும்பை-புணே இடையிலான டெக்கான் எக்ஸ்பிரஸ், மும்பை-நாக்பூா் இடையிலான நந்திகிராம் எக்ஸ்பிரஸ், மும்பை-புணே இடையிலான பிரகதி எக்ஸ்பிரஸ், சி.எஸ். மும்பை டொ்மினஸ்-நிஜாமுதீன் இடையிலான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல, மேற்கு ரயில்வே கோட்டத்தின்கீழ் இயக்கப்படும் இந்தூா்-புரி இடையிலான ஹம்சபா் எக்ஸ்பிரஸ், மும்பை சென்ட்ரல் -இந்தூா், பாந்த்ரா டொ்மினஸ்- ஜாம் நகா், மும்பை சென்ட்ரல்- ஜெய்ப்பூா், மும்பை சென்ட்ரல்- புது தில்லி இடையிலான 4 தூரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில்கள் என மொத்தம் 5 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த ரத்து புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com