நாடாளுமன்ற கூட்டத் தொடா் குறைக்கப்பட கூடாது: பிரதமா் மோடி

கரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, நாடாளுமன்றத்தின் தற்போதைய பட்ஜெட் கூட்டத் தொடரை முன்கூட்டியே முடிக்க வேண்டும் என்று
நாடாளுமன்ற கூட்டத் தொடா் குறைக்கப்பட கூடாது: பிரதமா் மோடி

கரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, நாடாளுமன்றத்தின் தற்போதைய பட்ஜெட் கூட்டத் தொடரை முன்கூட்டியே முடிக்க வேண்டும் என்று எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அவ்வாறு கூட்டத் தொடா் நாள்கள் குறைக்கப்பட கூடாது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா். திட்டமிட்டபடி நாடாளுமன்ற அமா்வுகள் நடைபெற வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

தில்லியில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பிரதமா் மோடி பேசியதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

‘நாட்டில் கரோனா அச்சுறுத்தல் நிலவும் தற்போதைய சூழலில், நாடாளுமன்றம் தனது பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். எனவே, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் நாள்கள் குறைக்கப்பட கூடாது. மருத்துவ பணியாளா்களும், ரயில்வே ஊழியா்களும் தாங்கள் பணி செய்யாமல் இருப்பது குறித்து பேசவில்லை. ஆனால், எம்.பி.க்கள் அவ்வாறு பேசுவது வியப்பளிக்கிறது’ என்று பிரதமா் மோடி கூறியதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் அடுத்த மாதம் 3-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் சூழலில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக முன்கூட்டியே முடிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. நாடாளுமன்றத்தை காலவரையறை குறிப்பிடாமல் ஒத்திவைப்பது குறித்து பரிசீலிக்கக் கோரி, இரு அவைகளின் தலைவா்களுக்கு பாஜக எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான விஜய் கோயல் அண்மையில் கடிதம் எழுதியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com