விதவையாக விரும்பவில்லை; விவாகரத்துக் கோரும் நிர்பயா குற்றவாளியின் மனைவி

விதவையாக வாழ விரும்பவில்லை, தூக்கிலிடும் முன்பே விவாகரத்து வழங்குமாறு கோரி நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான அக்‏ஷய் குமார் சிங்கின் மனைவி நீதிமன்றத்தில் விவாகரத்துக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
விதவையாக விரும்பவில்லை; விவாகரத்துக் கோரும் நிர்பயா குற்றவாளியின் மனைவி


புது தில்லி: விதவையாக வாழ விரும்பவில்லை, தூக்கிலிடும் முன்பே விவாகரத்து வழங்குமாறு கோரி நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான அக்‏ஷய் குமார் சிங்கின் மனைவி நீதிமன்றத்தில் விவாகரத்துக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

பிகார் மாநிலம் ஔரங்காபாத்தில் உள்ள கீழ் நீதிமன்றத்தில் விவாகரத்துக் கேட்டு மனு தாக்கல் செய்திருப்பதும், நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடுவதில் இருந்து தள்ளி வைக்க மேற்கொள்ளப்படும் சதியாகவே பார்க்கப்படுகிறது.

நிர்பயா குற்றவாளிகளை மார்ச் 20-ஆம் தேதி தூக்கிலிட தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவர்களைத் தூக்கிலிடுவதற்கு சிறையில் நேற்று ஒத்திகைப் பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான அக்‏ஷய் குமாரின் மனைவி தாக்கல் செய்த விவாகரத்து கோரும் மனுவில், ஒரு விதவையாக வாழ தான் விரும்பவில்லை. எனவே, மார்ச் 20ம் தேதி அக்‏ஷய் குமாரை தூக்கிலிடுவதற்கு முன்பு எனக்கு விவாகரத்து வழங்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை மார்ச் 19ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இது குறித்து அக்‏ஷய் குமாரின் மனைவி புனிதா கூறுகையில், எனது கணவர் நிரபராதி. அவரை தூக்கிலிடும் முன்பு எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

தில்லியில் கடந்த 2012-இல் ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகேஷ் குமார் சிங் (22), பவன் குமார் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங் (31) ஆகியோருக்கு வரும் 20-ஆம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற தில்லி நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்நிலையில், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நால்வரையும் தூக்கிலிடுவதற்கு இன்னும் 2 நாள்களே உள்ளன. 

அவர்களைத் தூக்கிலிடும் சிறை ஊழியர்கள் திகார் சிறையில் நேற்று ஒத்திகையில் ஈடுபட்டனர்.

நிர்பயா குற்றவாளிகள் தங்களது தூக்குத் தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவிடக் கோரும் சட்டத் தீர்வுகளை மேற்கொண்டதால் மூன்று முறை அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை நிறைவேற்றும் உத்தரவு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், அவர்களுக்கு மார்ச் 20-இல் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் புதிய உத்தரவை தில்லி நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்திருந்தது.

சிறையில் உள்ள குற்றவாளிகள் நால்வருக்கும் தினசரி உடல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தினசரி அடிப்படையில் அவர்களுக்கு மனநல ஆலோசனையும் அளிக்கப்பட்டு வருகிறது. மறுபக்கம், தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதை ஒத்திவைக்க குற்றவாளிகள் தரப்பில் பல்வேறு சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com