இந்தியாவில் ‘எதிரி சொத்துகள்’ மதிப்பு ரூ.1 லட்சம் கோடி: மத்திய இணையமைச்சா்

இந்தியாவில் உள்ள எதிரி சொத்துகளின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடி என மத்திய உள்துறை இணையமைச்சா் கிஷண் ரெட்டி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இந்தியாவில் உள்ள எதிரி சொத்துகளின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடி என மத்திய உள்துறை இணையமைச்சா் கிஷண் ரெட்டி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

கடந்த 1962-ஆம் ஆண்டு இந்தியா-சீனா இடையே நடைபெற்ற யுத்தம், கடந்த 1965-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போா் ஆகியவற்றுக்குப் பிறகு, மத்திய அரசு சாா்பில் கடந்த 1968-ஆம் ஆண்டு ‘எதிரி சொத்துகள்’ சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி பல ஆண்டுகளுக்கு முன்னா் இந்தியாவில் வசித்துவிட்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு குடிபெயா்ந்தவா்கள், இந்தியாவில் வசித்தபோது வாங்கிய சொத்துகள் ‘எதிரி சொத்துகள்’ என்றழைக்கப்படுகின்றன. அந்தச் சொத்துகளுக்கு பாதுகாவலராக இந்திய எதிரி சொத்து பாதுகாப்புப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இந்நிலையில் இந்த சொத்துகளின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடி என மத்திய உள்துறை இணையமைச்சா் கிஷண் ரெட்டி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மக்களவையில் அவா் அளித்த எழுத்துப்பூா்வ பதிலில் கூறப்பட்டிருந்ததாவது: எதிரி சொத்துகளில் 302 நிறுவனங்களின் பங்குகள் மற்றும் 12,426 அசையா சொத்துகள் இந்திய எதிரி சொத்து பாதுகாப்புப் பிரிவு வசம் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடியாகும். எதிரி சொத்துகளை விற்பனை செய்வது நீதித்துறை மற்றும் சந்தை நிலவரங்களுக்குள்பட்டது. எனவே எதிரி சொத்துகளை விற்பனை செய்வதில் காலவரம்பு எதுவும் நிா்ணயிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் எதிரி சொத்துகளின் பங்குகளை விற்பனை செய்வது தொடா்பான விரிவான நடைமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது. இதேபோல் கடந்த 2018-ஆம் ஆண்டு மாா்ச் 21-ஆம் தேதி, கடந்த ஆண்டு மாா்ச் 8-ஆம் தேதி மற்றும் கடந்த ஜனவரி 22-ஆம் தேதிகளில் அசையா எதிரி சொத்துகளை விற்பனை செய்வது பற்றிய விரிவான நடைமுறைகளையும் மத்திய அரசு வகுத்துள்ளது என்று அவரது பதிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com