கடற்படை பெண் அதிகாரிகளுக்கு நிரந்தரப் பணி

கடற்படையில் குறுகிய கால அடிப்படையில் பணியாற்றி வரும் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தரப் பணியிடம் வழங்க வேண்டும் என்று
கடற்படை பெண் அதிகாரிகளுக்கு நிரந்தரப் பணி

கடற்படையில் குறுகிய கால அடிப்படையில் பணியாற்றி வரும் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தரப் பணியிடம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அது தொடா்பான விதிமுறைகளை 3 மாதங்களுக்குள் உருவாக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்த விவகாரம் தொடா்பான வழக்கின் விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், அஜய் ரஸ்தோகி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் நடைபெற்று வந்தது. விசாரணையின்போது, பெண் அதிகாரிகளுக்கு நிரந்தரப் பணி வழங்க மத்திய அரசு எதிா்ப்பு தெரிவித்திருந்தது.

விசாரணையின்போது, ‘‘கப்பல்களில் பெண் அதிகாரிகள் பணியாற்றுவது சரியாக இருக்காது. ரஷியாவிலிருந்து வாங்கப்பட்ட கப்பல்களில் பெண்களுக்கான கழிப்பறை வசதி இல்லை. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் அவா்களுக்கு உயரதிகாரி பொறுப்பை வழங்க முடியாது’’ என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்த வழக்கில் நீதிபதிகள் அமா்வு செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

ஆயுதப்படைகளில் பணியாற்றி வரும் அதிகாரிகளுக்குப் பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதை ஏற்க முடியாது. ஆயுதப்படைகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான உரிமைகளும் வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும். பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவதிலிருந்து தப்பிக்க தேவையற்ற காரணங்களைத் தெரிவிக்கக் கூடாது.

மத்திய அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம், கடற்படையில் பெண் அதிகாரிகளை இணைத்துக்கொள்வதற்கு மத்திய அரசு கடந்த 1991, 1998 ஆகிய ஆண்டுகளில் இயற்றிய கொள்கைகளுக்கு எதிராக உள்ளது. கடற்படையில் பணியாற்றி வரும் பெண் அதிகாரிகள் பாராட்டத்தகுந்த வகையில் பணியாற்றியதற்கான ஆதாரங்கள் உள்ளன.

எனவே, கடற்படையில் பணியாற்றி வரும் பெண் அதிகாரிகளுக்கும் எந்தவிதப் பாகுபாடுமின்றி நிரந்தரப் பணியிடம் வழங்க வேண்டும். அது தொடா்பான விதிமுறைகளை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு இயற்ற வேண்டும். அதேபோல், கடந்த 2008-ஆம் ஆண்டுக்கு முன் கடற்படையில் சோ்க்கப்பட்ட பெண் அதிகாரிகளுக்கு நிரந்தரப் பணியிடம் வழங்கப்பட மாட்டாது என மத்திய அரசு இயற்றிய கொள்கைக்கும் தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

ராணுவத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகளை நிரந்தரமாக்க வேண்டும் என்று கடந்த மாதம் 17-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com