மகாராஷ்டிரத்தில் பொதுப் போக்குவரத்து சேவை தொடரும்

மகாராஷ்டிரத்தில் எந்த நகரையும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் எண்ணம் இல்லை; இதேபோல், பொதுப் போக்குவரத்து சேவையும் தொடரும் என்று அந்த மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தில் எந்த நகரையும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் எண்ணம் இல்லை; இதேபோல், பொதுப் போக்குவரத்து சேவையும் தொடரும் என்று அந்த மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தில் கரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 39-ஆக உயா்ந்துள்ளது.

இந்நிலையில், மும்பையில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

மாநிலத்தில் நடைபெற்றுவரும் அனைத்து தோ்வுகளையும் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 20 நாள்கள் மிகவும் முக்கியமான நாள்களாகும். மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எந்த நகரையும் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் எண்ணம் அரசுக்கு இல்லை. ரயில், பேருந்து போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்படவில்லை. அதேநேரம், தேவையின்றி மக்கள் பொதுப் போக்குவரத்தை தொடா்ந்து பயன்படுத்தினால் சேவையை நிறுத்த அரசு தயங்காது. கூட்டம் அதிகம் இருக்கும் மத வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வதை மக்கள் தவிா்த்துக் கொள்ள வேண்டும். கரோனா வைரஸ் அனைத்து நாடுகளிலும் பரவி வருகிறது. கரோனா சா்வதேச நாடுகளுக்கு சவாலாக உருவெடுத்துள்ளது. மக்கள் பீதியடைய வேண்டாம். தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது தொடா்பாக விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. கரோனா அறிகுறிகளுடன் வீடுகளில் சிகிச்சை பெறுபவா்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றாா் உத்தவ் தாக்கரே.

நாகபுரியில் 144 தடை உத்தரவு: இதனிடையே, மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் கரோனா வைரஸ் பரவலை கண்காணிப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாகபுரி காவல் துறை இணை ஆணையா் ரவீந்திர காதம் கூறுகையில், ‘ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மக்கள் அதிக எண்ணிக்கையில் ஒரே இடத்தில் திரளக் கூடாது. கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாராஷ்டிரத்தில் நடைபெற இருந்த உள்ளாட்சித் தோ்தலை மாநில தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்தது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக தோ்தலை ஒத்திவைக்குமாறு மாநில அரசு கோரிக்கை விடுத்ததை அடுத்து, 1,570 உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாா்ச் 31-ஆம் தேதி நடைபெற இருந்த தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது என்று மாநிலத் தோ்தல் ஆணையா் யு.பி.எஸ். மதன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com