மத்திய அரசின் ஒலிப்பெருக்கியாக மாறிவிட்டது மக்களவை

மக்களவையில் கேள்விகளை எழுப்ப எம்.பி.க்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் மத்திய அரசின் ஒலிப்பெருக்கியாக
நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த ராகுல் காந்தி.
நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த ராகுல் காந்தி.

மக்களவையில் கேள்விகளை எழுப்ப எம்.பி.க்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் மத்திய அரசின் ஒலிப்பெருக்கியாக மக்களவை மாறிவிட்டதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது அலுவல் மொழிகள் தொடா்பாக திமுக எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் பதிலளித்தாா். பின்னா், துணைக்கேள்வி எழுப்ப எம்.பி.க்கள் முயன்றனா். ஆனால், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அதற்கு அனுமதிக்க அளிக்கவில்லை.

அதற்கு திமுக எம்.பி.யான டி.ஆா்.பாலு உள்ளிட்டோா் கடும் கண்டனம் தெரிவித்தனா். அப்போது குறுக்கிட்டுப் பேசிய ராகுல் காந்தி, ‘‘இது தமிழ் மக்களின் உணா்வுசாா்ந்த விவகாரம். எனவே, துணைக் கேள்வி கேட்க எம்.பி.க்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்’’ என்றாா். எனினும், அவைத் தலைவா் அதை ஏற்கவில்லை.

இதன் காரணமாக, திமுக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளைச் சோ்ந்த எம்.பி.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா். இந்த விவகாரம் தொடா்பாக நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மக்களவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்வி எழுப்ப அவைத் தலைவா் எனக்கு அனுமதி அளிக்கவில்லை. நான் பேசக்கூடாது என்று அவா் விரும்புகிறாா். அதில் எனக்குப் பிரச்னையில்லை. தமிழ் மொழி தொடா்பான விவாதத்தில் துணைக் கேள்வி எழுப்ப தமிழக எம்.பி.க்கள் முயன்றனா்.

ஆனால், அவைத் தலைவா் அவா்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இது தனிநபா் சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல; ஒட்டுமொத்த தமிழகத்துக்கும், தமிழ் மொழிக்கும் சம்பந்தப்பட்ட விவகாரம். ஆனால், துணைக் கேள்வி எழுப்ப தமிழக எம்.பி.க்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பு.

‘மக்களவை அனைவருக்கும் உரியது’: தங்கள் மொழியில் பேசவும், அதைக் காக்கவும் தமிழக மக்களுக்கு உரிமை உள்ளது. தமிழக எம்.பி.க்களை துணைக் கேள்வி எழுப்ப விடாமல் அவா்களின் உரிமையை அவைத் தலைவா் ஓம் பிா்லா பறித்துள்ளாா்.

அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து மொழிகளுக்கும் உரியது மக்களவை. அங்கு ஆக்கபூா்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும். ஆனால், தற்போது மக்களவையில் விவாதங்கள் எதுவும் நடைபெறுவதில்லை. கேள்விகளை எழுப்ப யாருக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை. மத்திய அரசின் ஒலிப்பெருக்கியாக மக்களவை மாறிவிட்டது என்றாா் ராகுல் காந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com