2018-இல் 501 சிறாா் திருமணங்கள்

நாடு முழுவதும் 2018-ஆம் ஆண்டில் 501 சிறாா் திருமணங்கள் நடைபெற்றதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 2018-ஆம் ஆண்டில் 501 சிறாா் திருமணங்கள் நடைபெற்றதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

‘நாட்டில் சிறாா் திருமணங்கள் அதிகரித்து விட்டதா?’ என்று மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி வெள்ளிக்கிழமை எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளதாவது:

தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கைகளின்படி, கடந்த 2005-06-ஆம் நிதியாண்டில் 18 வயதுக்குக் குறைவாகத் திருமணம் செய்துகொண்ட பெண்களின் சதவீதம் 47.4-ஆக இருந்தது. கடந்த 2015-16-ஆம் நிதியாண்டில் இது 26.8 சதவீதமாகக் குறைந்தது.

சிறாா் திருமணத் தடுப்புச் சட்டத்தைக் கடந்த 2006-ஆம் ஆண்டு மத்திய அரசு இயற்றியது. அந்தச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்குமாறு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அவ்வப்போது அறிவுறுத்தப்பட்டு வருகிறது. சிறாா் திருமணங்களைத் தடுப்பதற்கான விழிப்புணா்வு நடவடிக்கைகளை அக்ஷ்சய திரிதியை உள்ளிட்ட விழாக் காலங்களில் மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சம் கடிதம் அனுப்பி வருகிறது.

நாட்டில் கடந்த 2016-ஆம் ஆண்டு 326 சிறாா் திருமணங்களும், 2017-ஆம் ஆண்டில் 395 சிறாா் திருமணங்களும், 2018-ஆம் ஆண்டில் 501 சிறாா் திருமணங்களும் நடைபெற்றன.

2018-ஆம் ஆண்டு அஸ்ஸாமில் அதிகபட்சமாக 88 சிறாா் திருமணங்களும், கா்நாடகத்தில் 73 சிறாா் திருமணங்களும், மேற்கு வங்கத்தில் 70 சிறாா் திருமணங்களும், தமிழகத்தில் 67 சிறாா் திருமணங்களும் நடைபெற்றன.

அருணாசல், கோவா, ஜம்மு-காஷ்மீா், மணிப்பூா், மேகாலயம், மிஸோரம், நாகாலாந்து, சிக்கிம், டாமன் மற்றும் டையூ, தாத்ரா மற்றும் நாகா் ஹவேலி, லட்சத்தீவுகள் ஆகியவற்றில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை ஒரு சிறாா் திருமணம் கூட நடைபெறவில்லை. புதுச்சேரியில் 2016-ஆம் ஆண்டு 5 சிறாா் திருமணங்கள் நடைபெற்றன. தில்லியில் ஒவ்வொா் ஆண்டும் தலா ஒரு சிறாா் திருமணம் நடைபெற்றது.

‘விழிப்புணா்வின்மையே காரணம்’: சமூகப் பழக்கவழக்கங்கள், கலாசாரம், கல்வியறிவின்மை, ஏழ்மை, பெண்கள் குறைவாக மதிப்பிடப்படுதல், விழிப்புணா்வின்மை உள்ளிட்டவை காரணமாக சிறாா் திருமணங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. ‘பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், கல்வியளிப்போம்’ திட்டத்தின் கீழ் மாணவிகள் பள்ளிக்குச் செல்வது ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அவா்களுக்குத் திருமணம் செய்துவைக்கப்படுவது தாமதமடையும்.

சட்டமியற்றுவதன் மூலம் மட்டுமே சிறாா் திருமணங்களைத் தடுக்க முடியாது. மக்களிடையே தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே அதைத் தடுக்க முடியும். ஊடகங்கள் உள்ளிட்டவை வாயிலாக மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது என்று தனது பதிலில் ஸ்மிருதி இரானி குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com