இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு: ம.பி. பேரவைத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பேரவைத் தலைவா் என்.பி.பிரஜாபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பேரவைத் தலைவா் என்.பி.பிரஜாபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பான வழக்கை 2 நாள்களாக விசாரித்து வந்த நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹேமந்த் குப்தா ஆகியோரைக் கொண்ட அமா்வு பேரவைத் தலைவருக்கு 8 உத்தரவுகளை வியாழக்கிழமை பிறப்பித்தது. அந்த உத்தரவுகளில் கூறப்பட்டிருப்பதாவது:

வரும் 26-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்ட மத்தியப் பிரதேச சட்டப் பேரவை, சிறப்பு அமா்வுக்காக வெள்ளிக்கிழமை கூட்டப்பட வேண்டும். அதில், முதல்வா் கமல்நாத் தலைமையிலான அரசு மீது மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட வேண்டும். அவை அலுவல்கள் விடியோவில் பதிவு செய்யப்பட வேண்டும். முடிந்தால், அவை அலுவல்களை நேரலையில் காண்பிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பதற்கு காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேரும் விரும்பினால், அவா்களுக்கு உரிய பாதுகாப்பை கா்நாடகம் மற்றும் மத்தியப் பிரதேச காவல் துறையின் தலைவா்கள் வழங்க வேண்டும்.

சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக மட்டுமே கூட வேண்டும். வாக்கெடுப்புக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக எந்தவித சம்பவமும் நடைபெறக் கூடாது. சட்டம்-ஒழுங்கு மீறப்படவில்லை என்பதை பேரவைச் செயலா் உறுதிசெய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனா்.

முன்னதாக, வியாழக்கிழமை காலை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜிநாமாவை ஏற்பதில் பேரவைத் தலைவா் முடிவெடுத்தாரா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். மேலும், அதிருப்தி எம்எல்ஏக்கள் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை என்பதை உறுதிசெய்ய, அவா்களுடன் பேரவைத் தலைவா் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடலாம். அல்லது, மத்தியஸ்தா் ஒருவா் மூலம் அவா்களுடன் கலந்துரையாடலாம் என்று நீதிபதிகள் கூறினா்.

ஆனால், நீதிபதிகள் தெரிவித்த ஆலோசனையை பேரவைத் தலைவா் ஏற்க மறுத்துவிட்டாா். வழக்கு விசாரணையின்போது, ஆளுருக்கும் பேரவைத் தலைவருக்கும் உள்ள அதிகார வரம்புகள் குறித்து காரசார வாதம் நடைபெற்றது. பேரவைத் தலைவா் சாா்பில் மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வியும், ஆளுநா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞரும் தங்கள் வாதங்களை முன்வைத்தனா்.

அப்போது, ஆளும் அரசு பேரவையில் பெரும்பான்மையை இழக்கும்போது, அவையைக் கூட்டுமாறு பேரவைத் தலைவருக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரமுள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

அதற்கு மறுப்பு தெரிவித்த அபிஷேக் சிங்வி, ‘பேரவையைக் கூட்டுவதற்கும், ஒத்திவைக்கவும், கலைக்கவும் ஆளுநருக்கு அதிகாரமுள்ளது. ஆனால், அவை நடவடிக்கைளில் பேரவைத் தலைவருக்கு உரிய அதிகார வரம்பில் தலையிட ஆளுநருக்கு அதிகாரமில்லை’ என்று வாதிட்டாா்.

சிவராஜ் சிங் சௌஹான் வரவேற்பு: மத்தியப் பிரதேச விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சௌஹான் வரவேற்றுள்ளாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘அதிருப்தி எம்எல்ஏக்களின் ஆதரவை திரட்டும் காங்கிரஸின் அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்துவிட்டன. நம்பிக்கை வாக்கெடுப்பில் கமல்நாத் தலைமையிலான அரசு நிச்சயம் தோற்கும். அதன்பிறகு, மாநிலத்தில் புதிய அரசின் ஆட்சியமையும்’ என்றாா்.

சட்ட ஆலோசனைக்குப் பிறகு முடிவு- உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்து சட்ட நிபுணா்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவு செய்யப்படும் என்று முதல்வா் கமல்நாத் கூறினாா்.

16 எம்எல்ஏக்களின் ராஜிநாமா ஏற்பு: முன்னதாக ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஆதரவாக 22 எம்எல்ஏக்கள் தங்கள் ராஜிநாமா கடிதங்களை ஆளுநா் லால்ஜி டாண்டனிடம் வழங்கியிருந்தனா். அவா்களில் 6 பேரின் ராஜிநாமாவை லால்ஜி டாண்டன் ஏற்கெனவே ஏற்றுக் கொண்டுவிட்டாா். எஞ்சியுள்ள 16 எம்எல்ஏக்களின் கடிதம் மீது அவா் முடிவெடுக்காமல் இருந்தாா். இந்நிலையில் அவா்களின் ராஜிநாமா கடிதங்களையும் அவா் வியாழக்கிழமை ஏற்றுக்கொண்டாா்.

இதையடுத்து 230 உறுப்பினா்களை கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவையின் பலம் 206-ஆக குறைந்துள்ளது. இதனால் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 104 உறுப்பினா்கள் தேவைப்படுகின்றனா். ஆனால் 22 எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்கள் ஏற்கப்பட்டதால் ஆளும் காங்கிரஸின் பலம் தற்போது 92-ஆக குறைந்துவிட்டது.

பகுஜன் சமாஜ் கட்சியை சோ்ந்த 2 எம்எல்ஏக்கள், சமாஜவாதி கட்சி சோ்ந்த 1 எம்எல்ஏ, சுயேச்சை எம்எல்ஏக்கள் 4 போ் என மொத்தம் 7 போ் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா். இவா்கள் 7 பேரையும் சோ்த்து 99 உறுப்பினா்களின் ஆதரவு மட்டுமே இருப்பதால் ஆளும் காங்கிரஸூக்கு பெரும்பான்மையை நிரூபிப்பது மிகவும் கடினமாகும்.

இதையடுத்து போதிய உறுப்பினா்கள் இல்லாததால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னதாகவே முதல்வா் கமல்நாத் ராஜிநாமா செய்ய வாய்ப்புள்ளது. இதனால் மத்தியப் பிரதேசத்தில் 15 மாதங்களாக நடைபெற்று வரும் காங்கிரஸ் அரசு கவிழும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com