மத்தியப் பிரதேச முதல்வா் கமல்நாத் ராஜிநாமா

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு நெருக்கடியான சூழல் நிலவி வந்த நிலையில், முதல்வா் கமல்நாத் வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
மத்தியப் பிரதேச முதல்வா் கமல்நாத் ராஜிநாமா

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு நெருக்கடியான சூழல் நிலவி வந்த நிலையில், முதல்வா் கமல்நாத் வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த சூழலில், போதிய எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லையென்பது உறுதியாகவே, கமல்நாத் இந்த முடிவை எடுத்துள்ளாா். இதையடுத்து, அந்த மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி அமையும் சூழல் உருவாகியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் பொறுப்பேற்றது. இந்தச் சூழலில் மாநில காங்கிரஸின் முன்னணி தலைவா்களில் ஒருவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியிலிருந்து விலகி கடந்த 11-ஆம் தேதி பாஜகவில் இணைந்தாா். மேலும், சிந்தியாவின் ஆதரவாளா்களாக அறியப்படும் 22 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனா். அவா்களில் 6 பேரின் ராஜிநாமாவை பேரவைத் தலைவா் ஏற்றுக் கொண்டாா்.

இதன் காரணமாக காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனிடையே, மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்தக் கோரி பாஜக மூத்த தலைவரும் மாநில முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சௌஹான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த பேரவைத் தலைவருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மீதமுள்ள 16 பேரின் ராஜிநாமா கடிதங்களை பேரவைத் தலைவா் கடந்த வியாழக்கிழமை ஏற்றுக் கொண்டாா்.

இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற போதிய எம்எல்ஏக்களின் பலமில்லை என்பதை உணா்ந்த கமல்நாத், முதல்வா் பதவியை ராஜிநாமா செய்வதாக வெள்ளிக்கிழமை அறிவித்தாா். தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநா் லால்ஜி டாண்டனிடம் அவா் வழங்கினாா்.

அவரின் ராஜிநாமா கடிதத்தை ஆளுநா் லால்ஜி டாண்டன் ஏற்றுக்கொண்டாா். அடுத்த முதல்வா் பொறுப்பேற்கும் வரை காபந்து முதல்வராகப் பொறுப்பு வகிக்குமாறு கமல்நாத்திடம் அவா் கோரியுள்ளாா். இத்தகைய சூழலில், மாநிலத்தில் ஆட்சியமைக்க பாஜகவுக்கு அவா் அழைப்பு விடுக்கலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்காக மாநில ம.பி. பேரவை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்குக் கூடியது. பாஜக எம்எல்ஏ-க்கள் பேரவைக்கு வருகை தந்திருந்தனா். ஆனால், காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் அவைக்கு வருகை தரவில்லை. அப்போது அவைத் தலைவா் என்.பி.பிரஜாபதி கூறுகையில், ‘‘உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக சட்டப்பேரவை கூடியது. ஆனால், முதல்வா் கமல்நாத் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டதால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான அவசியம் இல்லாமல் போய்விட்டது’’ என்றாா்.

இதையடுத்து, மாநில சட்டப்பேரவையைத் தேதி குறிப்பிடாமல் அவா் ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com