காலை 7 மணி முதல் இரவு 9 மணிக்குள் என்ன நடந்து விடும்?

மார்ச் 22ம் தேதி இந்தியா இதுவரை சந்தித்திராத ஒரு நாளாக மாறப் போகிறது. ஆம் மக்கள் ஊரடங்கு. கரோனா எதிரொலியாக இந்திய மக்கள் தங்களைத் தாங்களே வீட்டுக்குள் இருத்திக் கொள்ளப் போகிறார்கள்.
காலை 7 மணி முதல் இரவு 9 மணிக்குள் என்ன நடந்து விடும்?


மார்ச் 22ம் தேதி இந்தியா இதுவரை சந்தித்திராத ஒரு நாளாக மாறப் போகிறது. ஆம் மக்கள் ஊரடங்கு. கரோனா எதிரொலியாக இந்திய மக்கள் தங்களைத் தாங்களே வீட்டுக்குள் இருத்திக் கொள்ளப் போகிறார்கள்.

கரோனா பரவலைத் தடுக்க மார்ச் 22ம் தேதி மக்கள் ஊரடங்கு என்ற நடவடிக்கையை கைகொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இதனால் என்ன நடக்கப் போகிறது? அல்லது என்ன நடக்கலாம்? ஒரு சிறு பார்வை.

தற்போது வரை இந்தியாவில் கரோனா பாதித்தவருடன் நேரடியாக தொடர்பில் இருந்தவர்களுக்குத்தான் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சமூகத் தொற்றாக இது மாறவில்லை.

இந்த நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து பரவிய கரோனா வைரஸ் பொதுவிடங்களில், ரயில்களில், பேருந்துகளில் என பல இடங்களில் தொற்றிக் கொண்டிருக்கலாம். அதனை எதிர்பாராத வகையில் தொடும் யாருக்கேனும் கரோனா பரவ வாய்ப்பிருக்கிறது. இதைத் தடுக்கவே அவ்வப்போது கைக்கழுவ வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அதே சமயம், பொதுவிடங்களில் இருக்கும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது எப்படி? பொதுவிடத்தில் இருக்கும் வைரஸை அழிக்க வேண்டும், அதற்கு முன்பு, குறைந்தபட்சம் அதனை யாரும் தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. 

எனவே, நாளை காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை சுமார் 14 மணி நேரம் பொதுவிடங்களை யாரும் பயன்படுத்தாமல் இருந்தால், உடனடியாக வைரஸ் பரவலின் ஒரு சங்கிலித் தொடர்பு அறுபடலாம்.

அது மட்டுமல்ல, கரோனா வைரஸ் பரவல் என்பது ஒரு மாத காலம் மிகவும் முக்கியமானது. முதல், இரண்டு வாரங்கள் வரை அதன் பரவல் சாதாரணமாகவே இருக்கும். ஆனால் மூன்றாவது மற்றும் நான்காவது வாரங்கள் அதற்கு முக்கியக் காலக்கட்டமாக இருக்கும். எனவே, நாம் இப்போது எதிர்கொள்ளவிருப்பது 3வது வாரம். 

எனவே, நாளை இந்தியா முழுக்கக் கொண்டு வரப்படும் மக்கள் ஊரடங்கு என்பது ஒரு சோதனையாகக் கூட கொள்ளலாம். அதிகபட்ச அச்சமோ, பயமோ ஏற்படுத்தாமல், ஒட்டுமொத்த ஊரடங்கை மக்கள் கைக்கொள்ள ஒரு பயிற்சி.

இதை அடுத்து வரும் நாட்களில் தொடரவோ, ஒரு சில நாட்களுக்குக் கடைபிடிக்கவோ முயற்சிக்கலாம்.

அதே சமயம, நான்காவது வாரத்தை இன்னும் மிக எச்சரிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும். எனவே, இதில் அச்சப்பட ஒன்றும் இல்லை, எச்சரிக்கையோடு செயல்படுவோம். அறிவுறுத்தல்களை உதாசீனப்படுத்தாமல் உறுதியோடு கையாள்வோம். வெற்றி காண்போம்.

உலக வரலாற்றில் கரோனா இடம்பெறும். ஆனால் கரோனாவின் வரலாற்றில் இந்தியா இடம்பெறக் கூடாது என்பதை மனதில் கொள்வோம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com