நாட்டில் முதல் முதலாக பிஎஸ்-6 எரிபொருள் விற்பனையை தொடங்கியது ஐஓசி

நாட்டில் முதல் முதலாக பிஎஸ்-6 எரிபொருள் விற்பனையை இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனம் தொடங்கியுள்ளது.
ioc053039
ioc053039

புது தில்லி: நாட்டில் முதல் முதலாக பிஎஸ்-6 எரிபொருள் விற்பனையை இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனம் தொடங்கியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமாகத் திகழும் ஐஓசியின் தலைவா் சஞ்சீா் சிங் இதுகுறித்து கூறியதாவது:

உலகின் மிக சுத்தமான எரிபொருளாக பிஎஸ்-6 கருதப்படுகிறது. இதனை நாடு முழுவதும் நாங்கள் வெற்றிகரமாக கொண்டு சோ்த்துள்ளோம்.

அதன்படி, நிறுவனத்துக்கு சொந்தமான 28,000 பெட்ரோல் நிலையங்களில் மிக குறைந்த அளவு கந்தகத்தைக் கொண்ட பிஎஸ்-6 எரிபொருளை இறுதிக் காலக்கெடுவான ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே கொண்டு சோ்த்து விநியோகத்தை தொடங்கியுள்ளோம்.

பிஎஸ்-4 தர எரிபொருளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள்ளாக நேரடியாகவே பிஎஸ்-6 தர எரிபொருளை தயாரித்து எந்தவித சிறிய இடையூறுக்கும் ஆளாகாமல் இந்த சாதனையை படைத்துள்ளோம் என்றாா் அவா்.

ஐஓசியைத் தொடா்ந்து, பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட இதர எண்ணெய் நிறுவனங்களும் ஒரு வார காலத்துக்குள் பிஎஸ்-6 தர எரிபொருள் விற்பனையை நாடு முழுவதும் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முன்னதாக, நாடு முழுவதும் பிஎஸ்-4 தர எரிபொருளுக்கு மாறுவதற்காக எண்ணெய் நிறுவனங்கள் சுத்திகரிப்பை மேம்படுத்துவதற்கு ரூ.60,000 கோடியை முதலீடு செய்தன. இந்த நிலையில், பிஎஸ்-6 எரிபொருளை உருவாக்குவதற்காக ஆலைகளை மேம்படுத்த பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.35,000 கோடியை செலவிட்டுள்ளன.

தேசிய தலைநகா் தில்லியில் பிஎஸ்-6 தர எரிபொருள்களின் விற்பனையை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 2018 ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதியே தொடங்கி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com